சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளைத் தருவதாக விளம்பரம் செய்த நிறுவனத்திடம் காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. அந்த நிறுவனம் உள்ளூரில் செயல்பட்டது.
வேலைவாய்ப்பு தேடி நிறுவனத்தை அணுகுவோரிடம் கம்போடியாவில் உள்ள கோ கொங் உல்லாசத்தலத்தில்தான் அவர்களுக்கு முழுநேர வேலை வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் பிறகு கூறியது.
நிறுவனம் வழங்கும் வேலைக்கு மாதம் $6,000லிருந்து $10,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உல்லாசத்தலத்துக்கு ஊழியர்களை எடுப்பதாகக் கூறும் சாங்டிங் நெட்வொர்க் டெக்னாலஜி என்ற சிங்கப்பூர் நிறுவனம், தொழில்நுட்ப நிறுவனமாகத் தன்னைக் காண்பித்துக்கொள்கிறது.
வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிந்து, ஊழியர்களின் பணி உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர்கள் கோ கொங் உல்லாசத்தலத்தில் பணியமர்த்தப்படுவர் என்று வேலைக்கு ஆள் எடுக்கும் நிர்வாகி கூறுவார்.
நிறுவனம்மீது புகார் அளிக்கப்பட்டிருப்பதைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
கோ கொங் உல்லாசத்தலத்திற்கு அமெரிக்காவின் நிதியமைச்சு ஏற்கெனவே தடை விதித்துள்ளது.
லாய் யொங் ஃபாட் என்ற கம்போடிய வர்த்தகத் தலைவர் உல்லாசத்தலத்தின் உரிமையாளர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாடுகளிலிருந்து கடத்தப்படுவோர் கம்போடியாவில் உள்ள இணைய மோசடி நிலையங்களில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் அத்தகையோரை லாய் மிகவும் மோசமாக நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.
அதையடுத்து லாயையும் கோ கொங் உல்லாசத் தலத்தையும் அமெரிக்காவின் நிதியமைச்சு தடைசெய்யப்பட்டோரின் பட்டியலில் சேர்த்தது.
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் போதைப்பொருள், குற்றப் பிரிவு, மோசடி தொடர்பான அதன் அறிக்கையிலும் கோ கொங் உல்லாசத்தலம் பட்டியலிடப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரங்கள் வரும்போது அது எந்த அளவு உண்மையானது என்பதைச் சரிபார்க்கும்படி காவல்துறை அறிவுறுத்துகிறது.