சூரிய மின்தகடுகளையும் பசுமைக் கூரைகளையும் ஒரே இடத்தில் வைப்பதால் பயக்கும் பலன்

மின்சார உற்பத்தி அதிகரிப்பு, இடம் சேமிப்பு: ஆய்வு

2 mins read
f8fbb208-ecb8-4153-a44c-7378e4e9741b
சூரிய மின்தகடுகளுக்கும் பசுமைக் கூரைகளுக்கும் நேரடியாக சூரிய ஒளி தேவைப்படுவதால், இவற்றை ஒரே இடத்தில் வைப்பது சாத்தியமில்லை என்ற பொதுவான கருத்துக்கு, ஆய்வின் முடிவுகள் சவால் விடுக்கின்றன. - படம்: தேசிய பூங்காக் கழகம்

சூரிய மின்தகடுகளையும் பசுமைக் கூரைகளையும் ஒரே இடத்தில் வைப்பதால், அவ்விடத்தை மேலும் ஆக்ககரமாகப் பயன்படுத்துவதோடு, கூரையின் பசுமையையும் மேம்படுத்தலாம். இதனால் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதோடு, கட்டடங்களையும் குளிர்ச்சியாக வைத்திருக்கலாம் என்று சிங்கப்பூரில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

அதிகரித்த எரிசக்தி உற்பத்தி, குறைந்த உள் வெப்பநிலையின் காரணமாக, கட்டட உரிமையாளர்கள் செலவுகளைக் குறைக்கலாம்.

கட்டட, கட்டுமான ஆணையம், தேசிய பூங்காக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

சூரிய மின்தகடுகளுக்கும் பசுமைக் கூரைகளுக்கும் நேரடியாக சூரிய ஒளி தேவைப்படுவதால், இவற்றை ஒரே இடத்தில் வைப்பது சாத்தியமில்லை என்ற பொதுவான கருத்துக்கு, ஆய்வின் முடிவுகள் சவால் விடுப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.

சிங்கப்பூரில் இட நெருக்கடி இருப்பதால், சூரிய மின்தகடுகளையும் பசுமைக் கூரைகளையும் இணைப்பது சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதே இதன் முக்கிய நோக்கம் என்று என்யுஎஸ்ஸின் வடிவமைப்பு, பொறியியல் கல்லூரியின் இணைப் பேராசிரியர் ஸ்டீஃபன் டே கூறினார்.

அலெக்சாண்ட்ரா தொடக்கப்பள்ளி மேற்கூரையில், 2021 நவம்பர் முதல் 2022 அக்டோபர் வரை நான்கு வெவ்வேறு அமைப்புகள் ஓராண்டுக்கு சோதனை செய்யப்பட்டன. வெறும் கான்கிரீட் கூரை, வெறும் பசுமைக் கூரை, சூரிய மின்தகடுகளுடன் கான்கிரீட் கூரை, சூரிய மின்தகடுகளுடன் பசுமைக் கூரை ஆகியவை தனித்தனியாக வைக்கப்பட்டு சோதிக்கப்பட்டன.

சூரிய மின்தகடுகளின் மின்சார உற்பத்தி, கூரையின் மேற்பரப்பு வெப்பநிலை உள்ளிட்டவை ஆய்வில் அளவிடப்பட்டன.

சூரிய மின்தகடுகளுடன் கூடிய பசுமைக் கூரை அமைப்பில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது, பசுமைக் கூரை இல்லாத அமைப்பைவிட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்தது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

செடிகள் இலைகளிலிருந்தும் மண்ணிலிருந்தும் நீராவியை வெளியிடும் செயல்முறையால், சூரிய மின்தகடுகள் குளிர்ச்சியடைவதே இதற்குக் காரணம்.

சூரிய மின்தகடுகள் இருக்கும் அதே இடத்தில், செடிகளை வைப்பதால் மின்தகடுகளின் வெப்பநிலை குறையும். இதனால், இரண்டும் ஒரே இடத்தில் வைப்பது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது என்றும் பேராசிரியர் டே கூறினார்.

பசுமைக் கூரைகளும் சூரிய மின்தகடுகளும் இணைவது, கூரையின் மேற்பரப்பு வெப்பநிலையைக் குறைப்பது மட்டுமல்லாமல், கூரைக்கு நேரடியாக சூரிய ஒளி படாததால், உட்கூரையின் வெப்பநிலையையும் குறைக்கிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்