சிங்கப்பூரில் விலங்குநலத் துறையைச் சீரமைக்கும் நோக்கம் கொண்ட புதிய சட்டம் குறித்துப் பொதுமக்களின் கருத்துகள் இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் திரட்டப்படும். தவறுசெய்யும் விலங்குநல மருத்துவர்களுக்குத் தண்டனை விதிப்பது இலக்கு.
தேசிய வளர்ச்சித் துணையமைச்சர் ஆல்வின் டான் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அதனை அறிவித்தார். புகார்கள், விசாரணைகள், புலனாய்வுகள் முதலியவற்றை நிர்வகிக்கவும் மேல்முறையீடு செய்வதற்கான வழிகளை வகுக்கவும் வலுவான கட்டமைப்புத் தேவைப்படுகிறது. அதனை விலங்குநல நடைமுறை மசோதா உருவாக்கும் என்றார் அவர்.
நிபுணத்துவத் தவறு, கவனக்குறைவு தொடர்பான சம்பவங்களை விலங்குநல மன்றம் மேற்பார்வையிடும். சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் சிங்கப்பூர் விலங்குநலக் காட்சியில் துறைசார்ந்த சமூகத்தினரிடம் திரு டான் பேசினார்.
சிங்கப்பூரில் 2006ஆம் ஆண்டு உரிமம் பெற்ற 122 விலங்குநல மருத்துவர்கள் இருந்தனர். இவ்வாண்டு (2025) செப்டம்பர் நிலவரப்படி எண்ணிக்கை 674க்குக் கூடியுள்ளது.
புதிய சட்டம், விலங்குநல மருத்துவர்களுக்கான பதிவுக் கட்டமைப்பையும் அறிமுகப்படுத்தும் என்றார் திரு டான். விலங்குநல வல்லுநர்களின் பதிவேடு அதில் இடம்பெற்றிருக்கும். கூடுதல் பயிற்சியும் தகுதியும் பெற்றவர்களை அங்கீகரிக்கும் விதமாகப் பதிவேடு அமைந்திருக்கும்.
தேசியப் பூங்காக் கழகத்தின் விலங்குநல மருத்துவச் சேவையிடம் உரிமம் பெற்ற விலங்குநல மருத்துவர்கள் அனைவரும் புதிய கட்டமைப்பில் இணைக்கப்படுவர் என்று திரு டான் சொன்னார்.
புதிய சட்டம், விலங்குநல மருத்துவர்களுக்கான தண்டனையை அறிமுகப்படுத்தும். விலங்குநல மன்றம் அதனை நடைமுறைப்படுத்தும். மன்றத்தில் அரசாங்க, தனியார் துறைகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பர்.
அத்தகைய சம்பவங்களைத் தற்போது விலங்குநல மருத்துவச் சேவை கையாள்கிறது.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவர்களுக்கான கோட்பாடு, நடத்தை, நடைமுறை, தொடர் கல்வி முதலியவற்றுக்கான நிபுணத்துவத் தரநிலைகளைப் புதிய அமைப்பு வரையறுக்கும்.
சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, முதலில் அது விலங்குநல மருத்துவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். பின்னர் விலங்குநலத் துறையைச் சேர்ந்த தாதியருக்கு நீட்டிக்கப்படும்.
புதிய சட்ட மசோதா குறித்துக் கருத்துகளைக் கூறப் பொதுமக்கள் அழைக்கப்படுவதாக விலங்குநல மருத்துவச் சேவையின் அறிக்கை குறிப்பிட்டது.
மேல் விவரம் பெற விரும்புவோர் ‘ரீச்’ இணையத்தளத்தை நாடலாம். இணையப்பக்க முகவரி: https://www.reach.gov.sg

