வியட்னாமில் பதிவுசெய்யப்பட்ட ரசாயனக் கப்பல் ஒன்றில் ஊழியராகப் பணியாற்றிய ஒருவர் சுவாசக் கவசங்களை மாற்றியமைத்திருக்கிறார்.
தனது சக ஊழியர் அணிவதற்கு முன்பு அவர் அவ்வாறு செய்திருந்தார். சக ஊழியர் பின்னர் கவசத்தை அணிந்துகொண்டு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளக் கப்பலுக்குள் நுழைந்தார்.
சக ஊழியரான 40 வயது ஹோவாங் வான் சாவ் என்பவர் பின்னர் தான் சுத்தம் செய்துகொண்டிருந்த இடத்தில் மயங்கி விழுந்தார். சில வகை ரசாயனத்துடன் தொடர்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.
குற்றவாளியான 36 வயது லெ தான் டுங்குக்கு புதன்கிழமை (ஜூலை 2) மூன்று மாதங்கள் இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயகரமான செயலில் ஈடுபட்டதாகத் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவத்தில் கையன் டுக் கி, 49, டாவ் தியென் மான், 31, ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அவர்கள் மீதான வழக்குகள் இன்னும் நீதிமன்ற விசாரணைக்கு வரவில்லை.
குற்றவாளி உட்பட அந்த மூன்று ஆடவர்கள், உயிரிழந்தவர் அனைவரும் வியட்னாமைச் சேர்ந்த ஆடவர்கள்.