தெற்கத்திய குரலாக ஒலிக்கும் சீனா, இந்தியா ஏன் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளாகக் கருதப்படுகின்றன

சீனா-இந்தியா ஒருங்கிணைப்பு ஆசிய வட்டார வளர்ச்சிக்கு நல்வாய்ப்பு: ஆல்வின் டான்

3 mins read
8f6ae6e8-2130-4375-bdb5-5baf695220f7
தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான்  - படம்: கிழக்காசிய ஆய்வுக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்விக் கழகம். (EAI-NUS, ISAS-NUS)
multi-img1 of 2

ஆசியாவில் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் சக்திகளாக நீடிக்கும் சீனாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்தால் வட்டாரம் வளர்ச்சிபெறும் என்றும் இரு நாடுகளையும் பரந்த அளவில் இணைக்கும் தளமாக ஆசியான் திகழ்கிறது என்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் ஆல்வின் டான் கூறியுள்ளார்.

கிழக்காசிய ஆய்வுக் கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்விக் கழகத்தின் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு டான், ‘நிச்சயமற்ற உலகளாவிய சூழலுக்கு மத்தியில் சீனாவும் இந்தியாவும் வளர்ச்சி, முதலீடு வர்த்தகத்தை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.

வர்த்தக, தொழில் துணை அமைச்சருமான திரு டான், திங்கட்கிழமை (செப்டம்பர் 8) நடைபெற்ற கருத்தரங்கில் அனைத்துலக அரங்கிலும் வட்டாரப் பொருளியல் முன்னேற்றத்திற்கும் சீனாவும் இந்தியாவும் ஏன் முக்கியம்? சிங்கப்பூருக்கும் இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள அரசதந்திர உறவுகள் உள்ளிட்டவை குறித்துப் பேசினார். “மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் இரண்டாவது, நான்காவது பெரிய பொருளியல்களாக உள்ள சீனாவும் இந்தியாவும் இந்த ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சியில் சரிபாதி வளர்ச்சிக்கு வித்திடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

“உலகளாவிய விநியோகத் தொடர்புகளிலும் மிகவும் ஆழமாகப் பிணைந்துள்ள இந்த நாடுகள் பசுமைத் தொழில்நுட்பம், மின்னிலக்கமயமாதல், உற்பத்தி, சேவைத் தொழில்துறைகள் உள்ளிட்ட துறைகளில்  குறிப்பிடத்தக்க  வளர்ச்சியடையும்  ஆற்றலைக் கொண்டுள்ளன,” என்று திரு டான் கூறினார்.

மேலும், உலக மக்கள்தொகையில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமான பிரதிநிதித்துவத்தைக்  கொண்டிருப்பதும், செல்வாக்குமிக்க களமாகவும் உருவெடுத்து வரும் ‘பிரிக்ஸ்’ அமைப்பில்  அங்கம் வகிக்கும் இந்தியாவும் சீனாவும், உலகளாவிய தெற்கத்திய குரல்களாகவும் எதிரொலிக்கின்றன என்றார் திரு டான்.

இவ்விரு நாடுகளுடனான உறவை நீட்டிக்க வலுவான அடித்தளத்துடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் அதைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு டான், சீனாவும் சிங்கப்பூரும் எட்டியுள்ள 35 ஆண்டுகள்  அரசதந்திர உறவு குறித்தும் பேசினார்.

வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களைப் பூர்த்தி செய்ததுடன் அந்நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து சிங்கப்பூர் செயலாற்றியுள்ளது என்றும் அதேவேளையில் பகுதி மின்கடத்தித் துறையில் இந்தியாவுக்கான ஆதரவையும் சிங்கப்பூர் நல்கியுள்ளது என்றும் விவரித்தார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு வருகையளித்ததையும் பிரதமர் லாரன்ஸ் வோங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு கடந்த வாரம் முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டதையும் திரு டான் சுட்டினார்.

மேலும் இந்தியாவின் புதிய, வளர்ச்சியுறும் துறைகள் செழிப்புறச் செய்யும் திட்டங்களில் இணைந்துள்ள இளம் மற்றும் பேரளவிலான ஊழியரணியை ஆதரிக்கவும் அதன் தொடர்பிலான திறன்களை மேம்படுத்தவும் சிங்கப்பூர் அதன் ஒத்துழைப்பை அளிக்கிறது என்று திரு டான் விளக்கினார்.

சீன, இந்திய உறவுகளில் இருக்கும் சிக்கல் குறித்துப் பேசிய அவர், எனினும் அண்மைக் காலங்களில் அவ்விரு நாடுகளும் தங்களுக்குள் இருக்க வேண்டிய இணக்கங்களை தக்கவைக்க மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் சுட்டினார்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில், அரசியல் உலகில் நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்புடன் செயல்பட இருநாட்டுத் தலைவர்களும் நடைமுறைப்படுத்தி வரும் முயற்சிகளைப் பாராட்டிய திரு டான், “ஆசியாவின் கதை, பிணைப்பையும் தொடர்பையும் சார்ந்தது என்றார். சிங்கப்பூர் நீண்டகாலமாக சீனா, இந்தியாவுடன் இணைந்து செயலாற்றி வருகிறது,’’ என்றார்.

“தொடரும் இந்த இணைப்பை சிங்கப்பூரின் சீன, இந்தியச் சமூகங்கள் பிரதிபலிக்கின்றன.  நாம் உண்ணும் உணவிலிருந்து நாம் கொண்டாடும் பண்டிகைகள் வரை இதர மக்களுடன் சேர்ந்து இச்சமூகத்தினர் நம் தேசத்தை ஒன்றாகக் கட்டியெழுப்பி, நம் பண்பாட்டையும் வடிவமைத்துள்ளனர்.

“அவ்வகையில் இரு நாடுகளையும் பற்றிய சிங்கப்பூரின் புரிதலை இன்னும் வலுப்படுத்துவது வளர்ச்சிப் பாதையில் நாடுகள் மேலும் வளம் பெற, வளர்ச்சி காண உதவும்,” என்றார் திரு டான்.

குறிப்புச் சொற்கள்