இந்தோனீசியாவிலிருந்து குழந்தை கடத்தல் கும்பல் மூலம் சிங்கப்பூருக்குச் சில குழந்தைகள் கடத்தப்பட்டதாக நம்பப்படும் அண்மைய ஊடக அறிக்கைகள் தொடர்பில் இந்தோனீசியக் காவல்துறையிடமிருந்து அறிக்கையையோ கடத்தல் குறித்த தகவலையோ இதுவரை பெறவில்லை என்று சிங்கப்பூர்க் காவல்துறை (ஜூலை 18) தெரிவித்துள்ளது.
அந்தக் குற்றச்சாட்டு தொடர்பிலான செய்திகளை அறிந்திருப்பதாக சிங்கப்பூர்க் காவல்துறை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் சொன்னது.
“சம்பவம் குறித்து முறையான தகவல்களைப் பெற சிங்கப்பூர்க் காவல்துறை இந்தோனீசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டது. நமது சட்டங்களுக்கு உட்பட்ட தேவையான உதவிகளை இந்தோனீசிய அதிகாரிகளுக்கு வழங்குவோம்,” என்று காவல்துறை குறிப்பிட்டது.
இந்தோனீசியாவின் ‘த ஜகார்த்தா போஸ்ட்’ நாளேடு ஜூலை 18ஆம் தேதி மேற்கு ஜாவா காவல்துறை அதிகாரிகள் சட்டவிரோத தத்தெடுப்புக் கட்டமைப்பு மூலம் சிங்கப்பூருக்கு குழந்தைகளைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 13 பேரைக் கைது செய்ததாகக் கூறியது.
அந்தக் கடத்தல் கும்பல் 2023ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாகவும் குறைந்தது 25 குழந்தைகளை சிங்கப்பூருக்குக் கடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சில குழந்தைகள் இந்தோனீசியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
பெற்றோர் ஒருவர் குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக ஏஎஃப்பி நிறுவனம் ஜூலை 15ஆம் தேதி தெரிவித்தது. அதையடுத்து சந்தேக நபர் ஒருவர் 24 குழந்தைகளைக் கடத்தியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

