தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2030ல் சாஃப்ரா பேஷோர் மன்றம், பிடோக் சவுத் ரயில் நிலையம் அருகே அமையும்

2 mins read
3387947f-0cef-4f60-ae1b-0541c07903e3
தெம்பனிஸ் ஒன்றுகூடல் மன்றத்திற்குப் பதிலாகப் புதிய சாஃப்ரா பேஷோர் மன்றம்  இயங்கும் என்று தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆயுதப் படையினருக்கான மனமகிழ் மன்றமான சாஃப்ரா அமைப்பின் பேஷோர் மன்றம், வரும் 2030ல் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைய தெம்பனிஸ் மன்றத்திற்கு மாறாக புதிய மன்றம் செயல்படும் என்று தற்காப்பு மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகம்மது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.

தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் 2026ல் திறக்கவிருக்கும்  பிடோக் சவுத் எம்ஆர்டி ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் சாஃப்ரா பேஷோர் அமையவிருக்கிறது.

புதிய மன்றத்தின் பரப்பளவு, குறைந்தது 30,000 சதுர மீட்டர். இது, நான்கு காற்பந்துத் திடல்களுக்கு நிகரான பரப்பளவு. 

“இது, தற்போதைய சாஃப்ரா தெம்பனிஸ் மன்றத்தைப்போல் இருமடங்கு அளவு உள்ளது. அதிநவீன,  கட்டுப்படியான அதிக வசதிகளை புதிய மன்றம் நல்கவுள்ளது,” என்று திரு ஸாக்கி, சாஃப்ரா தோ பாயோவில் கூறினார். 

சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக தேசிய சேவையாளர்களுக்கான புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. 

1988ல் கட்டப்பட்ட தெம்பனிஸ் மன்றம், சாஃப்ராவின் ஆகப் பழையதாகும்.

நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு துணையமைச்சர் ஸாக்கி முகம்மது காசோலை வழங்குகிறார். 
நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு துணையமைச்சர் ஸாக்கி முகம்மது காசோலை வழங்குகிறார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெமாசெக் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் புதிய மன்றம் கட்டப்படும் என்று மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

சாஃப்ராவின் தலைவராகவும் உள்ள திரு ஸாக்கி, சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியிலுள்ள தேசிய சேவையாளர்களுடன் அந்த அமைப்பு தொடர்பில் இருந்து பேஷோரிலுள்ள வசதிகளையும் நடவடிக்கைகளையும் உறுதி செய்து வருவதாகக் கூறினார்.

உயர்வான, நீடித்த நிலைத்தன்மைமிக்க தரநிலைகளை அடைய மன்றத்தின் வடிவமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். தேசிய சேவையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் பல்வேறு கலை, விளையாட்டு, இசை மற்றும் விற்பனை நிகழ்ச்சிகளுக்கு ஒன்றுகூடத் தேவையான இட வசதியும் புதிய மன்றம் வழங்கும் என்று திரு ஸாக்கி கூறினார்.

“புதிய மன்றத்தின் இடம், சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ளவர்களால் எளிதில் செல்லக்கூடிய போக்குவரத்து வசதியைக் கொண்டுள்ளது,” என்று திரு ஸாக்கி முகம்மது கூறினார்.  

பிடோக் எம்ஆர்டி, 2025ல் திறந்துவிடத் திட்டமிடப்பட்டிருந்தது. இருந்தபோதும், முக்கிய உள்கட்டமைப்புக்கு அருகே சுரங்கப் பணியை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கட்டுமானச் சவால்களால் இதில் தாமதம் ஏற்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் பேஷோர் வட்டாரத்தில் 7,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் உள்பட 10,000 வீடுகள் கட்டப்படும். 

சுவா சூ காங், ஜூரோங், மவுண்ட் ஃபேபர், பொங்கோல், தெம்பனிஸ், தோ பாயோ, ஈசூன் ஆகிய இடங்களில் தற்போது ஏழு சாஃப்ரா ஒன்றுகூடல் மன்றங்கள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்