தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பராமரிப்பாளர்கள் கருத்துச் சேகரிப்புத் திட்டம்: பாட்டாளிக் கட்சி அறிமுகம்

2 mins read
f4f26d83-4d7d-4f0b-86c6-079701b0bb4f
திட்டத்தின் அறிமுக விழா வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 10) பாட்டாளிக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. - படம்: சாவ்பாவ்

பராமரிப்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அவர்களிடமிருந்து கருத்துகளைச் சேகரிக்கும் திட்டம் ஒன்றை எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்தக் கருத்துகளைக் கொண்டு கொள்கைகள் ரீதியிலான பரிந்துரைகள் முன்வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதிலிருந்து அக்டோபர் மாத இறுதி வரை குறைந்தது 600 பராமரிப்பாளர்களின் கருத்துகளைப் பெற பாட்டாளிக் கட்சி இலக்கு கொண்டுள்ளது.

அக்கருத்துகளை அக்கட்சி பகுப்பாய்வு செய்து அறிக்கைகளாக வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துச் சேகரிப்பு மூலம் பராமரிப்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பாட்டாளிக் கட்சி விழைகிறது.

சேகரிக்கப்படும் கருத்துகளைக் கொண்டு நாட்டில் பராமரிப்பாளர்களுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்த தேவையான கொள்கைகளைப் பரிந்துரை செய்ய அது திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு டாக்டர் ஓங் லியூ பிங் தலைமை தாங்குகிறார்.

இவர் மனநலக் கழகத்தில் உளவியல் நிபுணராகப் பணிபுரிகிறார்.

2025ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இவர் பாட்டாளிக் கட்சி சார்பாகத் தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தத் திட்டத்தின் அறிமுக விழா வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 10) பாட்டாளிக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

பராமரிப்பாளர்கள் எதிர்நோக்கும் மிகக் கடுமையான மூன்று சவால்கள் குறித்து அவர்களிடம் கேட்கப்படும் என்று திட்ட அறிமுக விழாவில் பேசிய டாக்டர் ஓங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் அவர்கள் எதிர்பார்க்கும் மூன்று ஆதரவுத் திட்டங்கள் குறித்தும் அவர்களிடம் கேள்வி கேட்கப்படும் என்றார் அவர்.

இணையம் வழி நடத்தப்படும் ஆய்வு மூலம் பராமரிப்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

திட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று பாட்டாளிக் கட்சி கூறியது.

மூத்தோர் மற்றும் நினைவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டோர், மூளை வளர்ச்சிக் குறைபாடு மற்றும் அறிவாற்றல் குறைபாடு கொண்டோர், உடற்குறை மற்றும் இதர மருத்துவப் பிரச்சினைகள் உள்ளவர்கள், மனநோய் கொண்டோர் ஆகிய நான்கு பிரிவினர்களைப் பராமரிப்பவர்களிடமிருந்து கருத்துகள் சேகரிக்கப்படும் என்று பாட்டாளிக் கட்சி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்