ஈசூனில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) அதிகாலை கார் மற்றும் பேருந்து விபத்தில் சிக்கின. அதில் காரில் இருந்த 23 பெண் பயணி மாண்டார்.
ஈசூன் அவென்யூ 2-ஈசூன் சென்ட்ரல் 1 சந்திப்பில் விபத்து நேர்ந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
விபத்து குறித்து தங்களுக்கு அதிகாலை 5.35 மணிவாக்கில் தகவல் வந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் கூறினர்.
விபத்தில் சிக்கிய பெண் பயணி கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார்.
மேலும் காரில் இருந்த 47 வயது ஆண் ஓட்டுநர் மற்றும் 20 வயது பெண் பயணி ஆகியோரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
விபத்து தொடர்பான படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதில் டவர் டிரான்சிட் பேருந்தின் பின்பகுதியில் வெள்ளி நிறத்திலான கார் ஒன்று மோதியிருந்தது. கார் கடுமையாகச் சேதமடைந்திருந்தது. குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் உதவி செய்து கொண்டிருந்தனர்.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.

