சமூக ஊடகப் பிரபலத்தைத் தூதராக நியமிப்பதை நிராகரிக்க மலேசியாவில் கோரிக்கை

2 mins read
b407f24c-60ff-47a5-bf07-8cb0ae35c621
40 வயது எழுத்தாளரும் காரசாரமாகப் பேசம் விமர்சகருமான நிக் ஆடம்சை மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக வெள்ளை மாளிகை, அமெரிக்க மேலவைக்கு முன்மொழிந்துள்ளது. - படம்: நிக் ஆடம்ஸ் / எக்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவு செய்துள்ள சமூக ஊடகப் பிரபலம் ஒருவரை நிராகரிப்பதற்கான கோரிக்கைகளை மலேசிய அரசாங்கம் எதிர்நோக்கி வருகிறது.

வர்த்தக வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடப்பில் இருந்து வரும் சூழலில் இந்த விவகாரம், இருநாட்டு உறவுகளைப் பாதிப்பதற்கான அபாயம் உள்ளது.

40 வயது எழுத்தாளரும் காரசாரமாகப் பேசும் விமர்சகருமான நிக் ஆடம்சை மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதராக வெள்ளை மாளிகை, அமெரிக்க மேலவைக்கு முன்மொழிந்துள்ளது.

இஸ்லாம் குறித்த திரு ஆடம்சின் கருத்துகள், காஸாவில் இஸ்ரேலின் ராணுவ முகாமிற்கான அவரது ஆதரவு ஆகியவை குறித்த கவலைகள் மலேசியாவில் எழுந்துள்ளன.

செனட்டில் வாக்களிப்பதற்கு எந்த நாளும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் திரு ஆடம்ஸ், உறுதி செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரு டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மை கொண்டுள்ள செனட் மேலவை, அவரது ஒவ்வொரு நியமனத்தையும் ஏற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தபின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற திரு ஆடம்ஸ், சமூக ஊடகத்தில் ஆண்கள் விவகாரத்தைப் பற்றி பேசும் பிரபலமாக இருக்கிறார்.

ஹாட் டாக்ஸ், இறைச்சித்துண்டுகள், கார்கள், அரைகுறை ஆடைகளை அணிவோர் வேலைசெய்யும் ஹூட்டர்ஸ் உணவகம் உள்ளிட்டவற்றை விரும்புவதாகத் திரு ஆடம்ஸ், தம் சமூகத் தளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இஸ்லாம் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதாகக் கூறி அதனைத் தாம் எதிர்ப்பதாகவும் திரு ஆடம்ஸ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்தார். பாலஸ்தீனர்களுடன் தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிடுபவர்கள், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

பாலஸ்தீன இயக்கத்தை நெடுநாளாக ஆதரித்துவரும் மலேசியாவில் இந்தப் பதிவுகள் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நியமனம், மலேசிய மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் விதமாக இருக்கும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான பாஸின் உறுப்பினர் முகமது சுக்ரி ஓமார் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்