கோலாலம்பூர்: மலேசியப் பள்ளிகளில் பகடிவதைச் சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதாக அந்நாட்டுக் கல்வியமைச்சர் ஃபட்லினா சித்திக் தெரிவித்துள்ளார்.
மாணவர் ஒழுங்கு நிர்வாகக் கட்டமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி பள்ளிக்கூடங்களில் கடந்த ஆண்டு நிகழ்ந்த பகடிவதைச் சம்பவங்கள் 17 விழுக்காடு அதிகரித்தன.
2023ஆம் ஆண்டு பள்ளிகளில் 6,628 பகடிவதைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 7,681க்கு அதிகரித்தது.
“கடந்த ஆண்டு நிகழ்ந்த பகடிவதைச் சம்பவங்களில் 1,992, தொடக்கப்பள்ளிகளில் நிகழ்ந்தவை. 5,689 சம்பவங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் நிகழ்ந்தன,” என்று பகடிவதைக் குறித்து கேள்வி எழுப்பிய ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோஃபுக்குத் திருவாட்டி ஃபட்லினா எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடையே நிகழும் பகடிவதைச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் கல்வியமைச்சு வழங்கவேண்டும் என்று திரு அஸ்லி கேட்டிருந்தார்.
அத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க அமைச்சு மேற்கொள்ளும் வழிகளையும் மேற்கோள்காட்டும்படி அவர் கூறினார்.
கல்வியமைச்சு பகடிவதை விவகாரத்தைக் கடுமையாகப் பார்க்கிறது என்ற திருவாட்டி ஃபட்லினா, அது தொடர்வதைத் தடுக்க பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதாகக் கூறினார்.
கல்வி சட்டம் 1996ன்கீழ் உள்ள கல்வி நடைமுறைகளில் (மாணவர் ஒழுங்கு) புதிய திருத்தங்களுக்கான நகல் வரைவை அமைச்சு உருவாக்க முற்படுகிறது என்றார் திருவாட்டி ஃபட்லினா.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் புதிய நகல் வரைவு அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதோடு ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் மாணவர்களைச் சமாளிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதலாக அமையும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பகடிவதையை முறியடிப்பது ஒரு தொடரும் முயற்சி என்ற திருவாட்டி ஃபட்லினா, அதைச் சரிவர செய்வதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்றார்.