புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங் அக்கம்பக்கத்துக் காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டு ஒரே புக்கிட் பாத்தோக் அக்கம்பக்கத்துக் காவல் நிலையமாக உருமாறும்.
வரும் நவம்பர் மாதம் 23ஆம் தேதி இவ்விரு காவல் நிலையங்களும் இணைக்கப்படும் என்று காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) தெரிவித்தது.
புதிய புக்கிட் பாத்தோக் காவல் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அது 2026ஆம் ஆண்டு திறக்கப்படும்.
புக்கிட் பாஞ்சாங் காவல் நிலையம் அக்கம்பக்கத்துக் காவல் சாவடியாக உருமாற்றம் காணும்.
இந்நடவடிக்கை, காவல்துறையின் முன்கள செயல்பாட்டுகளின் உருமாற்றப் பணிகளில் அடங்கும் என்று காவல்துறை குறிப்பிட்டது. மாறிவரும் பாதுகாப்பு தொடர்பான தேவைகள், சமூகத் தேவைகள் ஆகியவற்றை மேலும் நன்கு கையாள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அது விவரித்தது.
தீவு முழுவதும் உள்ள காவல்துறை கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையைக் கட்டங்கட்டமாக 200,000க்கும் மேலாக அதிகரிப்பதும் காவல்துறை முன்கள உருமாற்றப் பணிகளில் அடங்கும். புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங் வட்டாரங்களும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அடங்கும்.
புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங்கில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவதிலும் சம்பவங்கள் கையாளப்படுவதிலும் மாற்றங்கள் இருக்காது என்று காவல்துறை குறிப்பிட்டது. இரு காவல் நிலையங்களும் இணைக்கப்படுவது, சமூகத்தில் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவேண்டிய காவல்துறைப் பணிகளைக் கையாள வகைசெய்யும் என்றும் குற்றச் செயல்களைக் கையாள்வதற்கான ஆற்றலை மேம்படுத்தும் என்றும் காவல்துறை விளக்கமளித்தது.
சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வரும் வேளையில் அவசரமாகக் கையாளப்படவேண்டிய அவசியம் இல்லாத சம்பவங்களுக்குக் குடியிருப்பாளர்கள் இணையம்வழி புகாரளிக்கலாம் அல்லது புக்கிட் பாஞ்சாங் சவுத் அக்கம்பக்கத்துக் காவல் சாவடியின் சுய உதவிக் கூடத்தை (self-help kiosk) நாடலாம். நேரடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய தேவை இருந்தால் சுவா சூ காங் அக்கம்பக்கத்துக் காவல் நிலையத்துக்குப் போகலாம்.

