தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்போடியாவில் இயங்கிய சிங்கப்பூர் மோசடிக் கும்பல்: சகோதரர்கள் நடத்தியதாகச் சந்தேகம்

2 mins read
c5a50cfe-a1a4-45cb-a025-6f208659dcd5
சகோதரர்களில் ஒருவரான இங் வெய் லியாங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கம்போடியத் தலைநகர் நொம்பென்னில் பெரிய அளவில் மோசடிச் செயல்களை நடத்தியதாக நம்பப்படும் சிங்கப்பூர் கும்பலை சகோதரர்கள் இருவரும் அவர்களின் உறவுக்காரரும் வழிநடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அக்கும்பலை 32 வயது இங் வெய் லியாங் நடத்தியதாக நம்பப்படுகிறது. 41 மில்லியன் வெள்ளி மதிப்பிலான, 438 மோசடிச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் சிங்கப்பூர் காவல்துறை தேடிவரும் 27 சிங்கப்பூரர்களில் இவரும் ஒருவர்.

வெய் லியாங் இந்த மோசடிச் செயல்பாடுகளை 2024ஆம் ஆண்டு தொடங்கியதாகவும் அவற்றை நடத்தப் புதுப்பிப்புப் பணிகளை ஏற்று நடத்தும் தனது சகோதரர் 33 வயது வெய் காங்கையும் கிரிஸ்டி நியோ வெய் என், 29, எனும் தனது காதலியையும் நியமித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

பிறகு இவர்கள் வெய் லியாங்கின் உறவுக்காரரான லெஸ்டர் இங் ஜிங் ஹாய், 29 என்பவரையும் தங்கள் குழுவில் சேர்த்துக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. லெஸ்டர் இங் ஜிங் ஹாய், குற்றக் கும்பலில் உயரிய பொறுப்பில் இருந்த உறுப்பினர் எனக் கூறப்படுகிறது.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல் சட்டத்தின்கீழ் வெய் காங், நியோ, ஜிங் ஹாய் ஆகிய மூவர் மீதும் கடந்த செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மூவருக்கும் இம்மாதம் இரண்டாம் தேதி பிணை மறுக்கப்பட்டது.

இவர்களுடன் மேலும் 12 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர்களில் மலேசியர்கள் இருவர், பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரும் அடங்குவர்.

வியாழக்கிழமையன்று (அக்டோபர் 30) வெய் காங்கின் மனைவியை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டது. பேச ஒப்புக்கொண்ட அவர் தனது பெயரை வெளியிட விரும்வில்லை.

“இது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. எங்களுக்குத் திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் மிகவும் சாதாரண மனிதர்.

“99 விழுக்காட்டு நேரம் வீட்டில்தான் இருப்பார். தனது தந்தையுடன் கட்டட புதுப்பிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்துகிறார்,” என்று வெய் காங்கின் மனைவி தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான அவர், வெய் லியாங்குடன் தங்களுக்கு அதிகத் தொடர்பில்லை என்றார். வெய் லியாங் வெளிநாட்டில் வசித்து வந்தார் எனத் தாங்கள் அறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

வெய் காங், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள மோட் ரோட்டில் ஓர் உடல்பிடிப்புக் கூடத்தை நடத்தி வந்ததாகவும் வர்த்தகப் பதிவுகள் காட்டுகின்றன.

தேடப்படும் சிங்கப்பூரர்களில் முன்னாள் அங்கிலோ சீன பள்ளி (சுயேச்சை) மாணவரான ஃபினன் சியாவ் என்பவரும் அடங்குவார்.

ஃபினன் சியாவ்.
ஃபினன் சியாவ். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

ஃபினன் சியாவ், சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளுக்கான தேசிய ‘பி’ பிரிவு ரக்பி போட்டியின் இறுதியாட்டத்தில் ராஃபிள்ஸ் கல்விக் கழக அணிக்கு எதிராக ஆங்கிலோ சீனப் பள்ளிக்கு முக்கியப் புள்ளிகளைப் பெற்றவர்.

குறிப்புச் சொற்கள்