சட்டவிரோதமாக சிங்கப்பூரில் வாடகைக் கார் சேவை வழங்கிய மலேசியர் போக்குவரத்து அதிகாரியிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது.
லோ கீ மெங் என்ற அந்த 44 வயது ஆடவர்மீது, வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆடவர் அக்டோபர் 23ஆம் தேதியன்று பணியில் இருந்த சார்ஜன்ட் அகமது ஹஃபிஸ் சுகுர் என்ற போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் $50 கொடுத்து, எல்லை தாண்டிய வாடகை வாகனச் சேவை வழங்கிய குற்றத்தைப் புகார் அளிக்காமல் மறைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
லஞ்சத்தை போக்குவரத்துத் துறை அதிகாரி வாங்க மறுத்துள்ளார். பிறகு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவுக்கு (CPIB) இந்தச் சம்பவம் காவல்துறையால் மாற்றப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம் 6(b) பிரிவின்படி, லீ ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $100,000 அபராதமோ, ஐந்தாண்டுச் சிறையோ அல்லது இரு தண்டனைகளும் ஒருசேர விதிக்கப்படலாம்.
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையே உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே வாடகைச் சேவைகளை வழங்க இருநாட்டு அனுமதி உள்ளது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளிலும் சட்டவிரோத வாடகை வாகனச் சேவை வழங்குவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிங்கப்பூர் அரசாங்கமும் மலேசிய அரசாங்கமும் இதுபோன்ற சேவைகளை விரிவுபடுத்த பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன.

