பீஷான் நகர மையம், துணை வட்டார மையமாக மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வட்டாரத்தில் புதிய வேலையிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
வேலையிடங்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகியவற்றை நகர மையத்திலிருந்து வேறு வட்டாரத்துக்கு மாற்ற அரசாங்கம் கொண்டுள்ள திட்டத்துக்கு ஏற்ப இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
அலுவலகங்களுக்கான இடங்கள் பாய லேபார் சென்ட்ரலில் பெரிய அளவில் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதே போன்று பீஷானிலும் பல புதிய அலுவலகங்களை அமைப்பது குறித்து அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹோங் டாட் தெரிவித்தார்.
மேலும், பீஷான் நகர மையத்தில் புதிய பலதுறை மருந்தகம், உணவு அங்காடி நிலையம், புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதிகளுடனான பயணிகள் காத்திருப்பு இடங்களுடன் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாய லேபார், சிராங்கூன் போன்ற துணை வட்டார மையங்களில் வீடுகளுக்கு அருகில் வேலையிடங்கள் இருக்கும்.
உட்லண்ட்ஸ், ஜூரோங் ஈஸ்ட், தெம்பனிஸ் போன்ற வட்டார மையங்களைவிட துணை வட்டார மையங்கள் சிறியவை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் பீஷானில் உள்ள ஜங்ஷன் 8 கடைத்தொகுதிக்குப் பின்புறத்தில் உள்ள சாலையை இயற்கை வனப்புடைய பாதசாரிக் கடைத்தொகுதியாக்குவது தொடர்பாக ஆராயப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்படும் பீஷான் நகர மையத்துக்கு இடம் மாற எந்தெந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன என்பது குறித்து நகர மறுசீரமைப்பு ஆணையத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஆணையம், கூடிய விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் எனத் தெரிவித்தது.