சிங்கப்பூர், மோசடிக்காரர்களுக்கும் ஏமாற்றுவோருக்கு உடந்தையாக இருப்போருக்கும் பிரம்படி கொடுக்க வழிவிடும் புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறது. அண்மை ஆண்டுகளில் இங்கு மோசடிச் சம்பவங்களில் பில்லியன்கணக்கான டாலர் நட்டம் ஏற்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள், மோசடிக் கும்பல் உறுப்பினர்கள், அதற்கு ஆள் எடுப்போர் ஆகியோருக்குக் குறைந்தது ஆறு பிரம்படிகள் விதிக்கப்படக்கூடும். குற்றத்தின் கடுமையைப் பொறுத்து பிரம்படிகளின் எண்ணிக்கை 24 வரை போகக்கூடும்.
குற்றவியல் சட்ட (இதரத் திருத்தங்கள்) மசோதா, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 14) தாக்கல் செய்யப்பட்டது. மோசடிச் சம்பவங்களுக்காகத் தங்களின் சிங்பாஸ், சிம் அட்டைகள் அல்லது வங்கிக் கணக்கு விவரங்களைத் தருவோருக்கு நீதிமன்றத்தின் முடிவுக்கேற்ப அதிகபட்சம் 12 பிரம்படிகள் கொடுக்க அது முன்மொழிகிறது.
அதன்படி பிரம்படி விதிக்கப்பட வேண்டுமா என்பதை நீதிமன்றம் தீர்ப்பின்போது முடிவுசெய்யும்.
தற்போதுள்ள சில சட்டங்களில் மசோதா திருத்தங்களை முன்வைத்துள்ளது. பிரம்படிகளின் தொடர்பிலும் மாற்றங்களை அது அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த ஆண்டு (2025) மார்ச் மாதம், செலவின ஒதுக்கீட்டுக் குழு விவாதத்தின்போது அப்போதைய உள்துறைத் துணையமைச்சர் சுன் ஷுவெலிங், சில மோசடிக் குற்றங்களுக்குப் பிரம்படி கொடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று கூறியிருந்தார்.
2019க்குப் பிறகு சிங்கப்பூர், மோசடிச் சம்பவங்களில் $3.4 பில்லியனுக்கும் மேல் இழந்துள்ளது. ஏமாற்றப்பட்டவர்கள் கடந்த ஆண்டில் (2024) மட்டும் இதுவரை காணாத அளவுக்கு $1.1 பில்லியனைப் பறிகொடுத்தனர். இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரை மோசடிக்கு ஆளானோருக்கு ஏற்பட்ட நட்டம் $600 மில்லியனுக்கும் அதிகம்.
மோசடிகளுக்கு எதிரான போராட்டம் நாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என உள்துறை அமைச்சு தெரிவித்தது. மோசடிச் சம்பவங்களும் இழக்கப்பட்ட தொகையும் கவலையளிப்பதாக அது சொன்னது.
தொடர்புடைய செய்திகள்
வழக்கமான மோசடிக்கும் பிரம்படி கொடுப்பதைப் பரிசீலிக்கும்படி கூறுகிறது புதிய மசோதா. மோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவருக்குத் தற்போது 10 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகின்றன. ஆனால், பிரம்படி கொடுக்கப்படுவதில்லை.
பாலியல் குற்றங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியோரை உடல் ரீதியாகத் துன்புறுத்துதல், அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களைத் தீய நோக்கத்துடன் வெளியிடுதல், இளம் குற்றவாளிகளுக்கான தண்டனை முதலியவற்றின் தொடர்பிலும் முக்கியத் திருத்தங்கள் மசோதாவில் முன்வைக்கப்பட்டுள்ளன.