தீபாவளியையொட்டி பலவிதமான புதிய வகை சேலைகள் புகழ்பெற்றுவரும் நிலையில், அவற்றை நிறம், துணிவகை, உடல்வாகுக்கு ஏற்ப விதவிதமான பொருத்தமான மேலாடைகளுடன் அணிவதும் புகழ்பெறத் தொடங்கியுள்ளது.
தற்போது இளையர் முதல் மூத்தோர் வரை யாரும் கனமான, தடிமனான சேலைகளை விரும்புவதில்லை. ‘பாடி ஹக்கிங்’ சேலைகள் எனப்படும் லினன், டிஷ்யூ, சாஃப்ட் ஆர்கான்சா, சாஃப்ட் பனாரஸி என உடலோடு ஒட்டிய சேலைகளையே விரும்புகிறார்கள்,” என்றார் ‘தி ஃபேஷன் சில்கஸ்’ இயக்குநர் அனாமிகா.
சீமெய் வட்டாரத்தில் கடை நடத்திவரும் இவர், “இப்போது சேலைகளுக்கு இணையாக மேற்சட்டைகள்மீது கவனம் திரும்பியுள்ளன. எங்களிடம் இந்தத் தீபாவளிக்காக மட்டும் 1,000 வகை மேற்சட்டைகள் வந்துள்ளன,” என்றார்.
பண்டிகைக் காலங்களில் பட்டுச் சேலைகள் பலருக்கு முதன்மையான தெரிவாக உள்ளன. இவ்வாண்டு அதிலும் ‘சாஃப்ட் சில்க்’, ‘பனாரஸி சில்க்’, ‘காட்டன் சில்க்’ ஆகியவை அதிகம் நாடப்படுகின்றன.
பொதுவாக, சேலையுடன் வரும் ‘பிளவுஸ்’ அணிவது வழக்கமாக இருந்த நிலையில் தற்போது இருநிற சட்டைகள் பலரது விருப்பமாக மாறியுள்ளன.
முன்பகுதியில் ஒரு நிறம், பின்பகுதியில் ஒரு நிறம், கைகளில் அந்நிறங்களின் கலவையுடன் உள்ள சட்டைகளை அணிவது முரணான தோற்றம் அளிக்கின்றன.
இதே வகை சேலைகளை சற்று நவீன தோற்றத்துடன் அணிய விரும்புபவர்கள் ‘ஹைநெக்’ எனும் கழுத்து வரையுள்ள சட்டையை அணிகின்றனர். அதில் சரிகையின் நிறத்தில் பொத்தான்கள் வைத்துத் தைப்பதும் பலரது விருப்பமாகியுள்ளது.
அடுத்தபடியாக இளையர்களின் விருப்பமாக இருப்பது மல்மல் காட்டன், அஜ்ரக் வகை அச்சிடப்பட்ட சேலைகள். இவற்றுக்கு ‘ஹை காலர்’ எனப்படும் கழுத்துப்பட்டியுடன் கூடிய மேற்சட்டைகள், ‘லெகாரியா’ எனும் சற்று பெரிதான, நீளமான கைகள் கொண்ட சட்டைகள், ‘ரெக்லன்’ எனும் இறுக்கமான நீளமான கைகள் கொண்ட சட்டைகள் பலரது விருப்பமாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கட்டம் போட்ட துணிகளுக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருப்பது போன்றே, சேலைகளில் கட்டம் போட்ட சேலைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவற்றுக்கு அதே நிறத்தில் கட்டம் போட்ட மேற்சட்டைகளை அணிவதை விடுத்து, எதிரான நிறத்தில், கைகளில் பூத்தையல்கள் கொண்ட மேற்சட்டைகள் அணிவது புகழடைந்து வருகிறது.
உடலை ஒட்டிய புதுவகை சேலைகளுக்கு ‘ரஃபுள் யோக்’ எனும் முன்புறம் பட்டிகளுடன் வடிவமைக்கப்பட்ட சட்டைகள் அணிவது பிரபலமாக உள்ளது. எளிய நகைகளுடன் தோற்றத்தை முழுமையாகக் காட்டும் இந்த வகை சட்டைகளுக்கு இளையர்கள் மத்தியில் விருப்பம் கூடியுள்ளது.
“சினோன் எனும் துணியில், ‘டீப் வீ நெக்’ எனும் வகை மேற்சட்டைகளை இளையர்கள் விரும்புகின்றனர்,” என்றார் அனாமிகா. மேலும், ‘மெட்டல் ஃபயர் ஃபிளை’ எனும் வகை, ‘பேக்லெஸ் ஸ்லிட் டிசைனர்’ சட்டைகள், ‘ராஜ்வாடா’ சட்டைகள் ஆகியவையும் பெரிதும் விரும்பப்படுவதாக அவர் சொன்னார்.
இவ்வகை நவீன மேற்சட்டைகள் 50 வெள்ளியில் தொடங்கி 300 வெள்ளி வரை விற்கப்படுவதாக அவர் கூறினார்.
“தீபாவளித் திருநாளைப் பொறுத்தமட்டில், இந்தியர்கள் மட்டுமன்றி பல இனத்தவரும் சேலைகள் உடுத்தவும் அதற்கான பிரபல வடிவமைப்புகளில் மேற்சட்டைகளைத் தைக்கவும் விரும்புகின்றனர். எனக்குப் பல சீன வாடிக்கையாளர்கள் உள்ளனர்,” என்றார் 29 ஆண்டுகளாக இத்துறையில் செயல்பட்டு வரும் துர்கா மோகன்.
பேஷோர் பகுதியில் ‘சுபலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் & டெய்லரிங்’ எனும் கடையை நடத்திவரும் இவர், இவ்வாண்டு ஒரு மேற்சட்டை தைப்பதற்கான வடிவமைப்பு, வகைகளைப் பொறுத்து 58 வெள்ளி முதல் 78 வெள்ளி வரை வாங்குவதாகவும் கூறினார்.