மலாய் நாளிதழான ‘பெரித்தா ஹரியான்’ அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் பெரிய தாள் வடிவிலிருந்து (broadsheet) சிறிய தாள் வடிவுக்கு (compact) மாறவுள்ளது.
செய்தித்தாள் இன்னும் ஆழமான செய்தி ஆய்வுகள், கருத்துரைகளைத் தாங்கி வெளியாகும். இதன்வழி, மின்னிலக்க வடிவில் வரும் செய்திகளுக்குப் புதிய கோணத்தை வழங்கும் விதமாக அச்சு வடிவிலான செய்தித்தாள் அமையும்.
கூடுதலான நிகழ்ச்சிப் பட்டியல்கள், அன்றைய தினத்துக்கான செய்தி போன்றவற்றையும் புதிய பெரித்தா ஹரியான் செய்தித்தாள் வழங்கும்.
‘வாழ்வும் வளமும்’ அங்கங்கள் மேம்படுத்தப்பட்டு, பெரித்தா ஹரியானின் செய்தித் தூண்களாக விளங்கும் ‘காக்கி மக்கான்’ (சிங்கப்பூரின் உணவுப் பண்பாடு), ‘டிஎன்ஏ’ (சிறுவர் வளர்ப்பு), ‘காக்கி ஜாலான்’ (பயணி), ‘பஹாசா, புடாயா’ (மொழி, கலாசாரம்) போன்றவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நவம்பர் 7ஆம் தேதி இரவு ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலில் நடைபெற்ற 27வது ‘அனுகரா ஜாவ்ஹாரி பெரித்தா ஹரியான்’ (Anugerah Jauhari Berita Harian) விருதுவிழாவில் பெரித்தா ஹரியான் ஆசிரியர் முகமது நஸ்ரி மொக்தார் இதனை அறிவித்தார்.
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங்.
“நான் அடிக்கடி பெரித்தா ஹரியான் குழுவைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு முறை அதைச் சந்திக்கையிலும் அதன் குடும்ப உணர்வை உணரமுடிகிறது. தன்னுடையது மட்டுமன்றி மலாய்/முஸ்லிம் சமூகத்துக்கான எதிர்காலத்தைப் பற்றியும் துணிச்சலுடன் சிந்தித்ததற்காகப் பெரித்தா ஹரியானைப் பாராட்டுகிறேன்.
“இன்றைய மின்னிலக்க உலகில் செய்தித்தாளை நடத்துவது எளிதன்று. நீங்கள் காணொளிகள், வலையொளிகள் எனப் பலவற்றையும் வழங்கவேண்டும், ஆனால், எனக்கு இந்தக் குழுமீது நம்பிக்கையுள்ளது. அவர்கள் தொடர்ந்து புதிய சிந்தனைகளைத் தேடுவதை நான் கண்டுள்ளேன், வர்த்தக நோக்கோடு மட்டுமன்றி சமூகத்தைப் பிணைக்கும் நோக்குடனும்,” என்றார் அமைச்சர் சான். “நாம் இம்மாற்றத்தை வாசகர்கள், பங்குதாரர்களின் கருத்துகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
தொடர்புடைய செய்திகள்
“வாசகர் படிப்பதற்கு எளிதாகும். செய்தித்தாளிலுள்ள கியூஆர் குறியீடுகள்வழி பெரித்தா ஹரியானின் மின்னிலக்கச் செய்திகளை இன்னும் எளிதாக அணுகவும் வாய்ப்பளிக்கிறோம்,” என்றார் திரு நஸ்ரி.
அண்மைய ஜிஎஃப்கே கருத்தாய்வில், பிஹெச், ஆக நம்பகத்தனமான செய்தித்தாளாக அதன் வாசகர்களால் வரிசைப்படுத்தப்பட்டதைச் சுட்டிய திரு நஸ்ரி, நம்பகத்தனமான செய்திகளை வழங்கும் நோக்கத்திலிருந்து பெரித்தா ஹரியான் என்றும் மாறாது என உறுதியளித்தார்.
2027ல் பெரித்தா ஹரியான் தனது 70வது ஆண்டுநிறைவைக் கொண்டாடுவதை முன்னிட்டு, கடந்த ஈராண்டுகளாக அது பெருமாற்றங்களைக் கண்டுவருகிறது.
இவ்வாண்டு, ‘இன்மா’ (INMA) அனைத்துலக விருதுகளில், தலைசிறந்த செய்திநிறுவன உருமாற்றப் பிரிவில் பெரித்தா ஹரியான் மூன்றாம் நிலையைப் பிடித்தது. மக்களை, குறிப்பாக இளையர்களை, இன்னும் ஈர்க்க, பெரித்தா ஹரியானின் மின்னிலக்க உருமாற்றத்தை இவ்விருது அங்கீகரித்தது.
“நம் இணையத்தளம், செயலிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்கள் உள்ளன. எழுத்திலிருந்து ஒலியாக மாற்றும் தொழில்நுட்பம், ஏஐ சுருக்கம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளோம். கூடுதலான மின்னிலக்கச் செய்திகள், காணொளிகள், வலையொளிகளைத் தயாரித்து வழங்குவதற்கென இன்று நமக்கு ஒரு சமூக ஊடகக் குழு உள்ளது,” என்றார் திரு நஸ்ரி.
நிகழ்ச்சியில், இவ்வாண்டு ஜூலையில் பெரித்தா ஹரியான் ‘ஏஎம்பி சிங்கப்பூர்’ உடன் இணைந்து ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ஃப் விளையாட்டு நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட $271,000க்கும் மேற்பட்ட நிதியில் ஒரு பங்கு ($86,670) சிங்கப்பூர் சிறுவர் சமூகத்துக்கு நன்கொடையளிக்கப்பட்டது.
பெரித்தா ஹரியான் விருது விழா
விழாவில், இவ்வாண்டின் பெரித்தா ஹரியான் சாதனையாளர் விருதான ‘அனுகரா ஜாவ்ஹாரி பெரித்தா ஹரியான்’, பிரிகேடியர் ஜெனரல் ஃபைரோஸ் ஹசானுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருது, 31 வயதுக்கு மேற்பட்ட தலைசிறந்த மலாய்/முஸ்லிம் சிங்கப்பூரர்களை அங்கீகரிக்கிறது.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் வரலாற்றிலேயே பிரிகேடியர் ஜெனரல் பதவியை எட்டிய இரண்டாம் மலாய்/முஸ்லிம் வீரரே திரு ஹசான். அவர் ஒன்பதாம் சிங்கப்பூர் பிரிவின் தளபதியாகவும், தலைமைக் காலாட்படை வீரராகவும் பணியாற்றுகிறார்.
“பாண்டா அச்சே சுனாமிக்குப் பிறகு நான் ஒரு சிறு குழுவின் உறுப்பினராக அங்குச் சென்றேன். எப்படிச் சிறு குழுவாக மற்ற பெரிய ராணுவச் சேவைகளின் மத்தியில் பங்காற்றமுடியும் எனச் சிந்தித்தேன். ஆனால், உண்மையில், எங்களால் இந்தோனீசியர்கள், ஐக்கிய நாட்டு அமைப்புகள், ராணுவங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக நடத்தமுடிந்தது,” என்றார் திரு ஹசான்.
பெரித்தா ஹரியானின் இளம் சாதனையாளர் விருதை (Anugerah Jauhari Harapan), நூர் ஆய்ஷா லியானா முகமது சத்ரியா, 28, வென்றார். ‘மேஜா ஜுன்டிங்’ எனும் இளையர் எழுத்துக் கூட்டுக்குழுவை அவர் 2024ல் நிறுவினார். கலைவழி சமூகப் பிரச்சினைகளுக்கு அவர் குரல்கொடுத்து வருகிறார்.
நிதிப் பிரச்சினைகளுக்கு இடையிலும் உணவுப் பற்றாக்குறை, மின்சாரப் பிரச்சினைகளுக்கு இடையிலும் வளர்ந்த அவர், பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தம் தாயாருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட மறுநாள் தந்தைக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அப்போது தன் சகோதரர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஆய்ஷாவிடம் வந்தது.
ஆய்ஷா சிங்கப்பூரைப் பல அனைத்துலக மேடைகளிலும் பிரதிநிதுத்துள்ளார். கலையுலகுக்குத் தம்மை அர்ப்பணித்த தாயார் இன்று தன்னுடன் இல்லாவிட்டாலும், அவருக்குப் பெருமை சேர்த்துவருகிறார் ஆய்ஷா. தாயார் எழுதிய நாடகத்தை அண்மையில் ஜோகூரிலும் படைத்தார்.
“ஆய்ஷாவின் வளர்ச்சி எனக்கே மிகுந்த உந்துதலளிக்கிறது. இவ்வளவு சவால்களைக் கடந்தும் ஆய்ஷா சமூகத்தை நினைவுகூர்ந்து பங்காற்றுகிறார்,” என திரு சான் பாராட்டினார்.
“நானும் ஃபைரோசும் ஒன்றாகச் சேவையாற்றிய அதிகாரிகள். நான் சிறுவயதிலிருந்தபோது பிரிகேடியர் ஜெனரல் இஷாக் என் தளபத்திய அதிகாரியாக என்னைப் பார்த்துக்கொண்டார். நாம் நம் எதிர்காலத் தலைமுறையைப் பார்த்துக்கொள்ளவேண்டும் என நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். தன் கவனிப்பில் உள்ள வீரர்களை ஃபைரோஸ் நன்றாகப் பார்த்துக்கொள்வார் என நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார் திரு சான்.
மலாய்/முஸ்லிம் சமூகம், மற்றும் சிங்கப்பூரின் அடையாளம் பற்றியும் பேசினார் அமைச்சர் சான்.
“இன்னும் 10, 20 ஆண்டுகளில் மலாய்/முஸ்லிம் சமூகத்தின் வெற்றி என்னவாக இருக்கும்? ஒன்று, நம் வளர்ச்சி, சாதனைகள், தனிப்பட்ட சிங்கப்பூர் மலாய்/முஸ்லிம் அடையாளத்தில் பெருமைகொண்ட மலாய்/முஸ்லிம் சமூகம் இருப்பது. இரண்டாவது, சிங்கப்பூரின் சிறந்த நெறிகளை நம் சொந்த மலாய்/முஸ்லிம் பாரம்பரியத்துடன் இணைப்பது. மூன்றாவது, நம் வேற்றுமைகளைப் பொருட்படுத்தாத, வலுவான பிணைப்புகொண்ட சமூகம்.
“சிங்கப்பூர் அடையாளம் நம் வேற்றுமைகளை மறப்பது பற்றியதன்று. நம் வேறுபட்ட பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு பகிர்ந்த அடையாளத்தை வளர்ப்பதே சிங்கப்பூர் அடையாளம்,” என்றார் திரு சான்.

