வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி: சம்பவ இடத்தில் நால்வர்

2 mins read
ec0e49ec-41d9-4e8e-968c-0a7bbed2cec3
சீனாவைச் சேர்ந்த 36 வயது சுவோ யிங்டுயைச் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் அழைத்துசென்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புக்கிட் தீமா சாலையில் உள்ள தரைவீடுகளில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றோரைச் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) அழைத்துச்சென்றனர்.

புக்கிட் தீமா வனப்பகுதியில் வீடுகளுக்குள் நுழைய உதவும் கருவிகளுடன் இருந்த நான்கு ஆடவர்களின் முயற்சியை அதிகாரிகள் முறியடித்தனர்.

ஸுவோ யிங்குய், 36, யாங் சாவ், 41, ‌‌‌ஸாவ் சிஃபா, 36, ஹி ஜியாவ், 38 ஆகியோர்மீது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைய உதவும் கருவிகள் இருந்த குற்றச்சாட்டு இம்மாதம் 10ஆம் தேதி சுமத்தப்பட்டது.

அந்த நான்கு சீன நாட்டவரும் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சீனக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

ஆகஸ்ட் 14 காலையில் ஹியும் சாவ்வும் தனித்தனியாக புக்கிட் தீமா ரயில் கோரிடோர் (Rail Corridor) பகுதியில் உள்ள சம்பவ இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

லோரல் வூட் அவென்யூ என்ற மற்றொரு சம்பவ இடத்துக்கு மற்ற இரண்டு சந்தேக ஆடவர்கள் தனித்தனியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

யாங்கும் சுவாவும் கிரீன்லீஃப் பேட்டைக்கு அருகில் உள்ள ரயில் கோரிடோர் பகுதியில் ஆகஸ்ட் 8ஆம் தேதி காணப்பட்டதாக நீதிமன்ற ஆவணம் குறிப்பிட்டது.

அவர்களிடம் இரண்டு முகமூடிகள், முனையில் வளைந்திருந்த மூன்று திருப்புளிகள், மூன்று ஜோடி கையுறைகள் ஆகியவற்றுடன் டார்ச்லைட் விளக்கும் இருந்தன.

வீடு புகுந்து கொள்ளையடிக்கப் பயன்படும் கருவிகளைத் தவிர அவர்களிடம் மாற்று உடைகளும் $400க்கும் அதிகமான ரொக்கமும் இருந்தன.

காவல்துறை கண்காணிப்பின்போது சீனாவின் குய்‌‌‌சாவ்வைச் சேர்ந்த நான்கு ஆடவர்களும் சந்தேகத்திற்குரிய வகையில் பூங்காவில் இருந்தது கண்டறியப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் அவர்களை அணுகியபோது ஆடவர்கள் வனப் பகுதிக்குள் தப்பி ஓடினர்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்குள் அவர்களில் இருவர் பிடிபட்டனர். மூன்றாவது ஆடவர் அதே நாளில் கிளெமண்டிக்கு அருகில் உள்ள கடைத்தொகுதியில் சிக்கினார். மற்றோர் ஆடவரைக் கேலாங் ஹோட்டலில் மறுநாள் காலை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தடுப்புக் காவலில் உள்ள நால்வர்மீது விசாரணை தொடர்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவர்களுக்கு ஈராண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்