தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

80களின் தீமிதி நினைவுகளை திரையில் தீட்டிய ஓவியர்

3 mins read
9802724d-7ed0-43ab-b083-97f723192879
உள்ளூர்ச் சுவரோவியர் யிப் யூ சோங்கின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட 80களில் சைனாடவுன் நகரக்காட்சி. ஓவியர், தாம் தங்கியிருந்த 25ஆவது மாடிவீடு ஒன்றிலிருந்து பார்த்த காட்சியை நினைவுகளின் அடிப்படையில் வரைந்துள்ளார். - படம்: யிப் யூ சோங்

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) மாலை தீமிதித் திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி சிங்கப்பூரின் பிரபல சுவரோவியர் யிப் யூ சோங்  

கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு முன்னர் தயாரான இந்த ஓவியத்தின் புகைப்படம் தற்போது இந்தியாவிலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

1980களில் சைனாடவுன் பகுதியில் வளர்ந்த 56 வயது திரு யிப் அன்றைய நகரக்காட்சியைப் பற்றிய தம் நினைவுகளின் அடிப்படையில் இந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார். அவர் வரைந்து வண்ணம்தீட்டிய அந்த ஓவியத்தின் ஒரு பகுதி, மாரியம்மன் கோயிலில் இறைத்தொண்டர்கள் பூக்குழி மூட்டி வருவதைக் காண்பிக்கிறது.

ஓவியத்தின் அகலம் 2.5 மீட்டர். அதன் உயரம், 1.5 மீட்டர். தாம் சிறுவயதில் குடியிருந்த அடுக்குமாடி வீட்டிலிருந்து பார்த்த காட்சியின் நினைவுகளின் அடிப்படையில் இதனை வரைந்துள்ளதாகத் திரு யிப், தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“சைனாடவுன் வட்டாரத்தில் அந்தக் காலத்தில் இருந்த பழைய பாசார் மாலாம் எனப்படும் இரவுச்சந்தைக் கடை, துத்தநாக (zinc) கூரைகள் ஆகியவற்றை இந்த ஓவியத்தில் வரைந்துள்ளேன்.  

“உதாரணமாக, நான் பிள்ளையாக இருந்தபோது சாகோ லோன் என்ற சாலையில் தங்கியிருந்தேன். இறந்தோர்க்கான சாலை என்ற பெயருடன் அப்போது அந்தச் சாலை இருந்துவந்தது. அதனைக் குறிக்கும் வகையில் சீன இறப்புச் சடங்குகளைச் சித்திரிக்கும் காட்சியை வரைந்திருப்பேன்,” என்றார் திரு யிப். 

ஆலயம் பற்றிய நினைவுகள்

அக்காலத்தில் ஆலயத்தின் தரை சிமெண்ட் தரையாக இல்லாமல் மண் தரையாக இருந்ததைத் திரு யிப் நினைவுகூர்ந்தார்.

“நான் பலமுறை ஆலயத்திற்குள் நுழைவேன். செருப்புகளைக் கழற்றிவிட்டு நுழைவேன். பிறகு அவற்றைத் தேடிப் பார்க்கும்போது அவை காணாமல் போகின்றன,” என்று அவர் சிரித்தபடி கூறினார்.

ஆலயத்திற்குள் திருமண மண்டபம் கட்டி எழுப்பப்பட்டதற்கு முன் அதற்குள் இருந்த மரம் பெரிதாக இருந்ததையும் அந்தப் பகுதியில் தாவரங்கள் அதிகமாக இருந்ததையும் திரு யிப் நினைவுகூர்ந்தார். 

பிரம்மாண்ட ஓவியத்திற்குப் பக்கத்தில் ஓவியர் யிப் யூ சோங்.
பிரம்மாண்ட ஓவியத்திற்குப் பக்கத்தில் ஓவியர் யிப் யூ சோங். - படம்: யிப் யூ சோங்

ஆலயத்தில் இரண்டாவது மாடி அமைக்கப்பட்டதற்கு முன்னர் மக்கள் மொட்டை மாடி மீது ஏறி, தீமிதிச் சடங்குகளைப் பார்த்திருந்தனர். இன்று உள்ள கட்டுக்கோப்பான ஏற்பாடுகள் அந்தக் காலத்தில் இல்லை. சிங்கப்பூர் எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் பாருங்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னதாக திரு யிப்,  லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள பல்வேறு கட்டடங்களின் சுவர்களில் தமது கைவண்ணத்தைக் காட்டி பாராட்டு பெற்றுள்ளார். புதுடெல்லி, கோயம்பத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று அங்கு சுவரோவியங்களைத் தீட்டியுள்ளார்.

பல்வேறு இனத்து மரபுகளைக் கொண்டுள்ள சைனாடவுன் வட்டாரத்தில் வளர்ந்துள்ளதை எண்ணி மகிழ்வதாகத் திரு யிப் கூறினார்.

“நான் சிறு பிள்ளையாக இருந்தபோது இந்த வட்டாரத்தைச் சைனாடவுன் என நாங்கள் சொல்வதில்லை, கிரேத்தா ஆயர் என்ற பெயரில் குறிப்பிட்டோம். தண்ணீரை இழுக்கும் மாட்டு வண்டி என்ற பொருளைக் கொண்டுள்ளது கிரேத்தா ஆயர் என்ற பெயர். சீனர்கள், அதே பொருளைக் கொண்ட மற்ற பெயர்களாலும் அழைத்தனர்.

“என் அண்டை வீட்டார் எல்லோரும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். ஜாமெய் சூலியா பள்ளிவாசலும் ஆலயத்திற்கு அருகில் உள்ளது.  பல்வேறு சமயங்களைச் சேர்ந்த சமூகத்தினரிடையே வளர்ந்த எனக்கு, அவற்றின்மீதான ஆர்வமும் உண்டானது,” என்று அவர் கூறினார். 

வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தோர் ஆர்வத்துடன் பங்கேற்கும் தீமித்திருவிழா, அன்றும் என்றும் தம்மைப் பரவசத்தில் ஆழ்த்துவதாகத் திரு யிப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்