இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 1,173 நபர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டனர்.
சென்ற ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை நான்கு விழுக்காடு அதிகம்.
“தங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல் சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வாகனவோட்டிகள் இன்னும் இருக்கிறார்கள்,” என்று உள்துறை, வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன் கூறினார்.
கிளார்க் கீ நீருற்றுச் சதுக்கத்தில் (Clarke Quay Fountain Square) வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) நடைபெற்ற மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான வருடாந்தர இயக்கத்தைத் தொடங்கி வைத்து, சிறப்பு விருந்தினரான அவர் உரையாற்றினார்.
“நாம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மது அருந்துவதும் வாகனம் ஓட்டுவதும் ஒருபோதும் ஒன்று சேரக்கூடாது,” என்று திருவாட்டி சிம் ஆன் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மதுபோதையால் ஏற்பட்ட வாகன விபத்துகளின் எண்ணிக்கை 17% குறைந்து 94 ஆனது. 2024ஆம் ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை 113ஆக இருந்தது.
மேலும் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி, மரணம் விளைவித்த விபத்துகளின் எண்ணிக்கை 10லிருந்து ஐந்துக்குக் குறைந்துள்ளது.
“குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பல வழிகளில் வாழ்க்கையை அழிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்கள் உடல் ரீதியான காயங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான அதிர்ச்சி போன்றவை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்,” என்றும் திருவாட்டி சிம் ஆன் மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
‘நீங்கள் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு, பாதுகாப்பாக வீடு திரும்புவதுதான் (The Best Gift You Can Give Is Coming Home Safely)’ என்பது இவ்வியக்கத்தின் கருப்பொருள்.
தொடக்க நிகழ்ச்சியில், மது அருந்தி வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்க நிலைத்தன்மை வாய்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்த இருப்பதாகத் திருவாட்டி சிம் ஆன் பகிர்ந்துகொண்டார்.
இந்த முயற்சி வரவிருக்கும் பண்டிகைக் காலம் முழுவதும் தொடரும்.
இயக்கத்தின் ஓர் அங்கமாக, அடுத்தாண்டு சீனப் புத்தாண்டின் கொண்டாட்டங்களை முன்னிட்டு சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்துக் காவல்துறை ‘வீட்டிற்குப் பாதுகாப்பாகச் செல்லுங்கள் (Get Home Safely), மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் (Do Not Drink and Drive)’ ஆகிய வரிகள் கொண்ட சிவப்பு உறைகளை விநியோகிப்பர்.
போக்குவரத்துக் காவல்துறை மது அருந்தி வாகனம் ஓட்டுவதை தடுக்கும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை திருவாட்டி ஆன் மீண்டும் வலியுறுத்தினார். “சாலைகளில் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் வாகனம் ஓட்டுவோரை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்கமாட்டோம்,” என்றார் அவர்.
இந்த இயக்கத்தின் தொடர்பில் இவ்வாண்டு நவம்பர் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை), சிராங்கூன் சாலைக்கு அடுத்து தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் ரோட்டில், போக்குவரத்து காவல் துறையினர் மது அருந்தி வாகனம் ஓட்டுவதைக் கட்டுப்படுத்தும் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை நடத்தினர்.
அந்த அமலாக்க நடவடிக்கையின்போது, 35 வயதான ஆண் ஒருவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும் சோதனைச் சாவடியில் நில்லாமல் தப்பியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்கள் விழாக் காலங்களில் மதுபானங்களை அருந்தச் செல்லுமுன் தங்கள் பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தியதுடன் விடுமுறைக் காலத்தில் வாகனவோட்டிகள் பொறுப்பான சாலைப் பாதுகாப்பு முடிவுகளை எடுக்குமாறு வலியுறுத்தினார் போக்குவரத்துக் காவல்துறையின் சுற்றுக்காவல் பிரிவுக் குழுத் தலைவர் சலீஹா மஹ்மத் சானி.

