மோசடிக் கும்பலில் உறுப்பினராக உள்ளதாக நம்பப்படும் மலேசிய ஆடவர், மோசடிச் செயல்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து 441,000 வெள்ளி வசூலித்த சந்தேகத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
லீ ஜியன் செங், 31, என்னும் அந்த ஆடவர் அரசாங்க ஊழியர்களைப் போல நடித்துப் பல மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு உதவிய சந்தேகத்தில் செங்மீது வியாழக்கிழமை (செப்டம்பர் 18) குற்றஞ்சாட்டப்பட்டது.
செங் ஜூலை 17க்கும் ஆகஸ்ட் 1க்கும் இடைப்பட்ட நாள்களில் பண வசூலில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்மீதான விசாரணை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 12க்கும் ஆகஸ்ட் 8க்கும் இடையில் காவல்துறைக்கு மோசடிச் செயல்கள் தொடர்பாகப் பல புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
விசாரணையில் செங்கின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அப்போது அவர் மலேசியாவில் இருந்தார்.
அதன்பின்னர் மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு சிங்கப்பூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) செங் கைது செய்யப்பட்டார். அடுத்த நாள் அவர் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
செங்கிற்குத் தொடர்புடைய மோசடியாளர்கள் தங்களைச் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அதிகாரிகள் எனக் கூறி பொதுமக்களிடம் மோசடி செய்துள்ளனர்.
தங்களது வங்கிக் கணக்கு, குற்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அதனால் அதில் இருக்கும் தொகையை அதிகாரிகள் கொடுக்கும் வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிட வேண்டும் என்றும் மோசடியாளர்கள் பொதுமக்களை மிரட்டுகின்றனர்.
“மோசடியாளரின் கணக்கிற்குப் பணம் அனுப்பிய பிறகு, அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் பொதுமக்கள் திணறுகின்றனர். அதன்பின்னர் தான் அவர்கள் ஏமாற்றப்பட்டத்தை உணர்கிறார்கள்,” என்று காவல்துறையின் பேச்சாளர் கூறினார்.

