பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் உறுதிபூண்டுள்ளன.
இருப்பினும், தென்கிழக்காசியாவில் காற்று மாசுடன் தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) சீனாவின் மக்காவ் பலதுறைத் தொழிற்கல்லூரியும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் காற்று மாசைக் குறைக்க உதவாது என்றும் மக்களைப் பாதுகாக்க நச்சுத் துகள்களின் வெளியீட்டைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அதில் கண்டறியப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பால் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் காற்றை ஆசியாவின் கிழக்கு, தென்கிழக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் சுவாசிக்கின்றனர் என ஐக்கிய நாட்டுச் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்திற்கான இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டில், இந்தப் பகுதிகளில் நிலவிய PM2.5 காற்று மாசில் 64 விழுக்காடு புதைபடிவ எரிபொருளை எரிப்பது, எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றிலிருந்து வெளியேறும் புகையால் உருவானதாக இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் ஸ்டீவ் யின் கூறினார்.
இவர், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கான நிலையத்தின் தலைவராவார்.
PM 2.5 என்பது 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவாகச் சுற்றளவு கொண்ட நுண்துகள்களாகும். அவை மனிதர்களின் நுரையீரல், ரத்த ஒட்டம் போன்றவற்றில் ஊடுருவி, சுவாச, இதய நோய்களை ஏற்படுத்துகின்றன.
தொடர்புடைய செய்திகள்
மேலும், காற்று, வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற பருவநிலை, வானிலை நிலைமைகளால் அவை பாதிக்கப்படுகின்றன என்றும் ஒவ்வொரு காரணிகளும் மாசு எவ்வாறு உருவாகிறது, எப்படி பரவுகிறது, அகற்றப்படும் முறை ஆகியவற்றை பாதிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பருவநிலை மாற்றத்தால் தென்கிழக்காசியாவின் PM2.5 காற்று மாசில் உண்டான தாக்கம், அப்பகுதி மக்களின் உடல்நலம், பொருளியல் நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவை முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

