தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்று மாசுபாடு காரணமாகத் தென்கிழக்காசியாவில் வலுவடையும் புயல்கள்: ஆய்வு

2 mins read
6efbdb4f-3f03-486c-b898-a88983249244
தென்கிழக்காசிய நாடுகளில் கூடுதல் சக்திவாய்ந்த புயல்கள் அடிக்கடி வீசக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. பருவநிலை மாற்றமும் காற்று மாசடைதலும் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: இபிஏ

தென்கிழக்காசிய நாடுகளில் புயல்களின் சீற்றம் அதிகரித்திருப்பதற்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆய்வுக்கு பேராசிரியர் ஸ்டீவ் யிம் தலைமை தாங்கினார்.

இவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்கான நிலையத்தின் தலைவராவார்.

தென்கிழக்காசியா தொடர்பான பத்தாண்டுகள் செயற்கைக் கோள் மற்றும் வானிலைத் தரவுகளை ஆய்வு பகுப்பாய்வு செய்தது.

சக்திவாய்ந்த புயல்கள் மேலும் வலுவடைந்து முன்பைவிட அடிக்கடி பாதிப்பை ஏற்படுத்துவதாக தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக, தென்கிழக்காசியாவில் இந்நிலை ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைத்துளிகளின் அடர்த்தி, அளவு ஆகியவற்றைக் கொண்டு புயலின் சீற்றத்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டனர்.

காற்று மாசடைந்த இடங்களின் மழைத்துளிகள், தூய்மையான காற்று உள்ள பகுதிகளில் விழும் மழைத்துளிகளைவிட அதிகபட்சம் 1.8 மடங்கு பெரிதாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, எரிபொருள் பயன்பாடு காரணமாக வெளியேறும் புகை, ஆலைகளிலிருந்து வெளியேறும் புகை போன்றவற்றால் காற்று மாசடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதுமட்டுமல்லாது, புதைபடிவ எரிபொருளை எரிப்பதால் வெளியேறும் புகையால் தென்கிழக்காசியாவில் காற்று மாசடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசடைந்த பகுதிகளில் புயல் வீசும்போது மழையின் அளவு 50 விழுக்காடு வரை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தென்கிழக்காசிய நாடுகளில் கூடுதல் சக்திவாய்ந்த புயல்கள் அடிக்கடி வீசக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது. பருவநிலை மாற்றமும் காற்று மாசடைதலும் இதற்குக் காரணம் என்று பேராசிரியர் யிம் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் காரணமாக புயல்களின் சீற்றம் அதிகரிக்கிறது.

கடல்களின் வெப்பநிலை அதிகரிப்பதால் வளிமண்டலத்தில் வெப்பமும் ஈரத்தன்மையும் அதிகரிக்கின்றன. இதனால் புயல் மேகங்கள் உருவாகும் சாத்தியம் அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் சேர்த்து, காற்று மாசடையும்போது நிலைமை மோசமடைவதாகப் பேராசிரியர் யிம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்