மோசடியாளர்களுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் ஆடவர்மீது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஓவன் டான் ஜியான் வெய் என்னும் 24 வயது ஆடவர், மோசடியில் ஏமாந்த மக்களிடம் பணத்தை வசூலித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
வசூல் செய்யப்படும் தொகையைப் பொருத்து 30 வெள்ளி முதல் 50 வெள்ளி வரை மோசடியாளர்களிடமிருந்து ஓவன் பரிசாகப் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஓவன் மீது மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, சட்டவிரோதமாகக் கணினி கட்டமைப்பைப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அக்டோபர் 10ஆம் தேதி ஓவன், பாசிர் ரிஸ் ஸ்தீரிட் 12ல் உள்ள குடியிருப்பு வளாகத்தில் மோசடியால் ஏமாற்றப்பட்ட நபரிடமிருந்து 10,000 வெள்ளி வசூலித்துள்ளார்.
மோசடியாளர்களிடம் அந்த நபர் மூன்று தவணைகளில் 75,000 வெள்ளி கொடுத்து ஏமாந்துள்ளார். பொய்யான முதலீட்டுத் தகவல் கொடுத்து ஆடவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பண மோசடி தொடர்பாகக் காவல்துறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஓவன் பிடிபட்டார்.
ஓவன் மோசடியாளர்களுக்குத் தனது வங்கிக் கணக்குத் தகவல்களையும் கொடுத்துள்ளார். விசாரணைத் தொடர்கிறது.

