சிங்கப்பூரின் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம், சிக்கலான சில அம்சங்களைச் சுட்டியதை அடுத்து பயணத் தளமான அகோடா அதன் இணையத்தளத்திலும் செயலியிலும் சில வடிவமைப்புகளை மாற்றியுள்ளது.
அந்த அம்சங்கள், அகோடாவின் தங்குமிடங்களைத் தேடுவதோடு அவற்றுக்குப் பதிவு செய்வதுடன் தொடர்புடையவை. அவை வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் என்று ஆணையம் குறிப்பிட்டது.
‘பெஸ்ட் மேட்ச்’ (Best Match) குறியீடு
அகோடாவின் ‘பெஸ்ட் மேட்ச்’ (Best Match) தேடல் முடிவுகள், பயணத் தேதிகள், வருகையாளர் மதிப்பீடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பரிந்துரைக்கப்படுவது போல இருப்பதாக ஆணையம் கண்டறிந்தது. ஆனால் அந்தத் தேடல் முடிவுகள் தளம் ஈட்டும் தொகையையும் கணக்கில் எடுக்கிறது. அதையடுத்து அகோடா ‘பெஸ்ட் மேட்ச்’ (Best Match) குறியீட்டுக்குப் பதிலாக ‘அவர் பிக்ஸ்’ (Our Picks) என்ற குறியீடாக அதனை மாற்றியது.
‘அகோடா பிரிஃபெர்ட்’ (Agoda Preferred) முத்திரைகள்
இந்த முத்திரை தேர்ந்தெடுக்கப்பட்ட சில தங்குமிடங்களில் வருகிறது. அத்தகைய தங்குமிடங்களுக்கும் அகோடாவுக்கும் நீண்டகால உறவு இருப்பதையும் குறிப்பிட்ட சில தரநிலைகளைத் தங்குமிடங்கள் பூர்த்திசெய்வதையும் முத்திரை குறிக்கிறது. அகோடா தற்போது அந்த முத்திரையை மறுஆய்வு செய்ததோடு அத்தகைய தங்குமிடங்கள் கூடுதல் இடைத்தரகுப் பணத்தைச் செலுத்துவதையும் வெளிப்படுத்தியது.
விலை மலிவான நட்சத்திர தங்குமிட முத்திரை
அத்தகைய முத்திரை கொண்ட தங்குமிடங்களின் விலை தேடல் முடிவுகளில் எப்போதும் ஆக குறைவானதாக இருந்ததில்லை. பயனீட்டாளர்கள் குழம்புவதைத் தவிர்க்க அகோடா அந்த முத்திரையை முழுமையாக அகற்றிவிட்டது.
அகோடா இணையத்தளத்தில் தங்குமிடங்களைப் பதிவு செய்வதற்கான விவரங்களை உள்ளீடு செய்ய ஐந்து நிமிடங்கள் மட்டும் கொடுக்கப்பட்டது. அந்த அவகாசம் தற்போது 20 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் நியாயமான வர்த்தகச் சட்டங்களின்படி வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடிய அம்சங்கள் முறைகேடான வணிக நடைமுறைகளாகக் கருதப்படுவதாக சிங்கப்பூரின் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் சுட்டியது.