சிங்கப்பூரில் முதல் முறை ரத்த தானம் செய்வோருக்கான அதிகபட்ச வயது வரம்பு 60லிருந்து 65க்கு உயர்த்தப்படுகிறது. 2026ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து அது நடப்புக்கு வரும்.
மக்களின் ஆயுள்காலம் மேம்பட்டுள்ளதாலும் வயதான காலங்களில் உறுதியுடன் இருப்பதாலும் அந்த வயது வரம்பு உயர்த்தப்படுகிறது.
முதல் முறையாக ரத்த தானம் செய்யும் மூத்தோரிடையே மயக்கம் போன்ற எதிர்மறை பாதிப்புகள் குறைவதாக உள்ளூர்த் தகவல்கள் காட்டுவதால் ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கையைக் கூட்ட முடிவெடுக்கப்பட்டதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் (ஜூன் 28) கூறினார்.
ஹாங்காங், தைவான், ஐஸ்லாந்து, நெதர்லந்து, தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் வழக்கத்துக்கு ஏற்ப சிங்கப்பூர் வயது வரம்பை மாற்றியதாக அமைச்சர் ஓங் சொன்னார். அத்தகைய நாடுகளும் நகரங்களும் 65 வயதிலிருந்து 69 வயதுக்கு உட்பட்டோரை முதன்முறையாக ரத்த தானம் செய்ய அனுமதிக்கிறது.
தற்போது 60 வயது வரையிலான மக்கள் மட்டுமே முதன்முறையாக ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். முதன்முறை ரத்தம் கொடுத்ததை அடுத்து ஒருவர் 66வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு வரை ரத்த தானம் செய்ய முடியும்.
சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் ஏற்பாடு செய்த உலக ரத்த தின நாள் நிகழ்ச்சியில் திரு ஓங் அதை அறிவித்தார்.
“ஒவ்வொரு ரத்த தானமும் மூன்று உயிர்களைக் காப்பாற்றும். புற்றுநோயை எதிர்த்து போராடும் பிள்ளை, பிரசவத்தில் இருக்கும் தாய், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் மூத்தவர்,” என்று திரு ஓங் சொன்னார்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 35,000க்கும் அதிகமான நோயாளிகள் உயிர் காக்கும் ரத்த மாற்று சிகிச்சை மேற்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
உடல்நலம் குறைவுற்ற தமது தாயாருக்குக் கடந்த வாரம் ரத்த மாற்று சிகிச்சை நடந்தபோது அதிக அளவில் ரத்தம் தேவைப்பட்டதைத் திரு ஓங் குறிப்பிட்டார்.
உலக ரத்த தான நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்த 2,000க்கும் அதிகமானோரும் 37 அமைப்புகளும் பாராட்டப்பட்டன.
சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டு மூப்படையும் சமூகம் அதிகம் இருக்கும் என்பதால் நிலையான ரத்த விநியோகம் இருப்பதை அவசரமாக உறுதிசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாகச் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் தெரிவித்தன.