காவல்துறைக்கு எதிராக மூர்க்கத்தனமாக நடந்துகொண்ட 37 வயது ஆடவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது.
திங்கட்கிழமை (அக்டோபர் 27) அதிகாலை, பிடோக் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடத்தின் அருகே அதிகாரி ஒருவரை நோக்கி அவர் ஆயுதம் ஒன்றைச் சுழற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிகாலை 2.30 மணி அளவில், புளோக் 12 பிடோக் சவுத் அவென்யூ 2 அருகில் உள்ள பகுதியில் காவல்துறை அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது காரிலிருந்து பயணிகளை இறக்கிவிடும் இடத்தில் கார் ஒன்று இருப்பதை அவர்கள் கண்டனர்.
காரின் ஓட்டுநரை அவர்கள் அணுகியபோது அந்த ஆடவர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கரம்பிட் கத்தி ஒன்றைக் கொண்டு அவர் அதிகாரி ஒருவரை நோக்கி சுழற்றியதாகக் கூறப்படுகிறது.
பிறகு அந்தக் கத்தியைத் தமது கழுத்தின் மீது அவர் வைத்துக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்தியைக் கீழே போடுமாறு அதிகாரிகள் எவ்வளவு எச்சரித்தும் அந்த ஆடவர் கேட்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
எனவே, அந்த ஆடவரை நோக்கி அதிகாரிகள் டேசர் துப்பாக்கியால் சுட்டுச் செயலிழக்க வைத்தனர்.
பிறகு அவரைக் கைது செய்தனர்.
ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

