மதுபோதையில் விபத்து, காவல்துறையிடம் பொய்: வழக்கறிஞருக்கு சிறை, அபராதம்

2 mins read
487be42f-ea6c-45a2-befe-15c57df2e23d
வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நீதிமன்றத்துக்கு வந்த ஸ்டீவன் ஜான் லாம் குவெட் கெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு காவல்துறையினரிடம் பொய் கூறிய வழக்கறிஞருக்கு சிறைதண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளன.

ஸ்டீவன் ஜான் லாம் குவெட் கெங் (படம்), எனப்படும் அந்த 56 வயது ஆடவர் 2024 ஏப்ரல் 7ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் 12.30 மணியளவில் மது அருந்திய நிலையில் புக்கிட் பாஞ்சாங் ரோட்டில் வாகனத்தை ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தார்.

அதனால் அவரது வாகனம் சாலை ஓர தடுப்புக் கம்பிகளில் மோதியது.

விடிந்த பின்னர் அந்த விபத்து தொடர்பாகக் காவல்துறை விசாரணை நடத்தியபோது தமது வாகனத்தை வேறு யாரோ ஓட்டியதாக அவர் பொய் சொன்னார்.

‘டெம்ப்ளர்ஸ் லா’ என்னும் சட்ட நிறுவனத்தின் இயக்குநரும் இணை நிறுவனருமான லாமுக்கு வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) எட்டு வார சிறைத் தண்டனையும் $18,000 அபராதமும் விதிக்கப்பட்டன.

மேலும், சிறையிலிருந்து விடுதலை ஆன தேதியிலிருந்து ஆறாண்டு காலத்திற்கு எந்தவிதமான ஓட்டுநர் உரிமத்தையும் பெற அவருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூரரான அந்த வழக்கறிஞர் மீது மதுபோதையில் வாகனம் ஓட்டியது, அரசாங்க ஊழியரிடம் பொய் கூறியது போன்றவை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன. அவற்றை அவர் ஒப்புக்கொண்டார்.

லாம் தமது குற்றத்துக்காக வருந்துவதாகவும் சம்பவம் நிகழ்ந்த நாளில் தாம் நிலைதடுமாறி இருந்ததாகவும் கூறியதாக அவரது வழக்கறிஞர் ரமேஷ் திவாரி நீதிமன்றத்தில் கூறினார்.

தற்போது தண்டிக்கப்பட்டு உள்ள லாம், இதற்கு முன்னர் 2006ஆம் ஆண்டிலும் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியற்காகத் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்