தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விற்பனையில் முறைகேடு: சிங்டெலுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு $83 மில்லியன் அபராதம்

1 mins read
0ee1c486-773b-43b8-ba59-e7835fdfca0c
முறைகேட்டை நிவர்த்திசெய்ய தான் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆப்டஸ் சொன்னது. - படம்: ஆப்டஸ்

சிங்டெல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குச் சொந்தமான ஆப்டஸ் நிறுவனம், நூற்றுக்கணக்கான பயனீட்டாளர்களிடம் தொலைத்தொடர்பு பொருள், சேவைகளை விற்றதில் அதன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் A$100 மில்லியன் (S$83.4 மி.) அபராதம் உள்ளடங்குவதாக ஆஸ்திரேலியப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் புதன்கிழமை (ஜூன் 18) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது. இந்த அபராதத் தொகை பொருத்தமான ஒன்றா என்பதை கூட்டரசு நீதிமன்றம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று ஆணையம் கூறியது.

ஆஸ்திரேலியக் கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2019 ஆகஸ்ட்டுக்கும் 2023 ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏறக்குறைய 429 வாடிக்கையாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடுகளில் ஆப்டஸ் நிறுவனம் அநியாயமாகச் செயல்பட்டு, முறைகேடாக விற்பனை நடைமுறைகளைச் செயல்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

2025 மார்ச் 31ஆம் தேதி முடிவடைந்த இதற்கு முந்தைய நிதியாண்டில் இந்த அபராதத் தொகை கருத்தில் கொள்ளப்பட்டதாக ஆப்டஸ் கூறியது.

இந்நிலையில், முறைகேட்டை நிவர்த்திசெய்ய தான் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆப்டஸ் சொன்னது. அதன் சில்லறை விற்பனை செயல்முறைகளிலும் விற்பனை ஊக்குவிப்பிலும் மாற்றங்களைச் செய்வது இதில் அடங்கும்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் தான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர்களுக்கு இதுதொடர்பில் இழப்பிட்டு ஏற்பாடு செய்து வருவதாகவும் ஆப்டஸ் சொன்னது.

குறிப்புச் சொற்கள்