சிங்கப்பூர்க் கப்பல் பதிவகம் கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூர்க் கொடி தாங்கிய 94 கப்பல்களை இணைத்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்திருக்கும் துறைமுகக் கட்டணங்களைத் தவிர்க்க அதிகமான வெளிநாட்டுக் கப்பல் உரிமையாளர்கள் மாற்று வழியை நாடுவது அதற்குக் காரணம்.
புதிய கப்பல்கள் இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் கொடி தாங்கிய கப்பல்களின் எண்ணிக்கை 4,230ஆக அதிகரித்து உள்ளது.
அவற்றின் மூலம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் எட்டு மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கூடுதலாக இணைக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூர்க் கப்பல் பதிவகம் 127.8 மில்லியன் டன் சரக்குக் கொள்ளளவைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதல் 19 மில்லியன் டன் அதில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு உள்ளது.
2024ஆம் ஆண்டு முழுமைக்கும் சேர்க்கப்பட்ட 8.5 மில்லியன் டன் கொள்ளளவைக் காட்டிலும் இது அதிகம்.
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள முன்னோடி மதிப்பீடுகளில் இந்தத் தகவல்கள் காணப்படுகின்றன.
நம்பகமான கடல்சார் மையம் என்பதைச் சிங்கப்பூர் வலுப்படுத்தி இருப்பது அதற்கு முக்கியக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கத் துறைமுக வரியைத் தவிர்க்க அதிகமான கப்பல் நிறுவனங்கள் தங்களது அடையாளக் கொடியை சிங்கப்பூர்க் கொடிக்கு மாற்றி வருகின்றன. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் கப்பல் நிறுவனங்கள் மாற்று வழியைத் தேடியுள்ளன.
அந்த இரு வல்லரசுகளும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அக்டோபர் 14ஆம் தேதி வரி விதிக்கத் தொடங்கின.
சீனாவின் கப்பல்களுக்கு அமெரிக்கத் துறைமுகங்களில் ஒரு டன்னுக்கு US$50 (S$65) கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சீனா அல்லாத பிற நாடுகளின் கப்பல்களுக்குக் குறைவாக ஒரு டன்னுக்கு US$18 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

