தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விற்பனைக்கு விடப்பட்டுள்ள 9,144 பிடிஓ வீடுகள்

4 mins read
fab0e47c-a6c4-4104-9e33-e09dd672fc71
தோ பாயோவில் உள்ள மவுண்ட் பிளசெண்ட் கிரஸ்ட்டில் ஈரறை வீடுகள், மூவறை வீடுகள், நான்கறை வீடுகள் என 1,350 வீடுகள் கட்டப்படும். - படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

தேவைக்கு ஏற்ப கட்டப்படும் (பிடிஓ) 9,144 வீடுகள் புதன்கிழமை (அக்டோபர் 15) விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

அவற்றில் தோ பாயோ நகருக்கு உட்பட்ட மவுண்ட் பிளசெண்ட, புக்கிட் மேராவில் கெப்பல் கிளப் முன்பு அமைந்திருந்த பெர்லாயார் ஆகிய இரண்டு புதிய குடியிருப்புப் பேட்டைகளில் முதல்முறையாகக் கட்டப்படும் வீடுகளும் அடங்கும்.

ஒட்டுமொத்தமாக, அங் மோ கியோ, பிடோக், பீஷான், புக்கிட் மேரா, ஜூரோங் ஈஸ்ட் , செங்காங், தோ பாயோ, ஈசூன் ஆகிய வட்டாரங்களில் பத்து குடியிருப்புத் திட்டங்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

கிரேட்டர் சவுதன் வாட்டர்ஃபிரண்ட்டின் ஒரு பகுதியான புதிய பெர்லாயார் குடியிருப்புப் பேட்டையில் முதன்முதலாகக் கட்டப்படும் பெர்லாயார் ரெசிடென்சஸ் வீடுகளுக்கான மானியத் தொகை திருப்பிக் கொடுக்கும் விகிதம் 14 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவே ஆக அதிகமான மானியத் தொகை திருப்பிக் கொடுக்கும் விகிதம்.

ஜூலை மாதம் விற்பனைக்கு விடப்பட்ட ‘பிரைம்’ வீடுகளின் மானியத் தொகை திருப்பிக் கொடுக்கும் விகிதம் 11 விழுக்காட்டுக்கும் 12 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும்.

வழங்கப்படும் கூடுதல் மானியங்களுக்கு ஏற்ப இந்த மானியத் தொகை திருப்பிக் கொடுக்கும் விகிதம் அமையும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) கூறியது.

இந்த வீடுகளை வாங்குவோர் அவற்றில் குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு வசிக்க வேண்டும். அதன் பிறகே அவர்கள் அந்த வீடுகளை விற்கலாம்.

தோ பாயோவில் உள்ள மவுண்ட் பிளசெண்ட் கிரெஸ்ட்டுக்கும் புக்கிட் மேராவில் உள்ள ரெட்ஹில் பீக்சுக்குமான மானியத் தொகை திருப்பிக் கொடுக்கும் விகிதம் 12 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பீஷான் டெரசுக்கான மானியத் தொகை திருப்பிக் கொடுக்கும் விகிதம் 10 விழுக்காடாகும்.

விற்பனைக்கு விடப்படும் வீடுகளில் Oak Ville @ AMK மட்டுமே ‘பிளஸ்’ திட்ட வீடுகளாகும். அவற்றுக்கான மானியத் தொகை திருப்பிக் கொடுக்கும் விகிதம் 7 விழுக்காடாகும். இத்திட்டத்தின்கீழ் அங் மோ கியோ அவென்யூ 5ல் 1,425 வீடுகள் கட்டப்படுகின்றன. அவற்றுக்கான குறைந்தபட்ச வசிப்புக் காலம் 10 ஆண்டுகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து குடியிருப்புத் திட்டங்கள் ஸ்டாண்டர்ட் பிரிவின்கீழ் இடம்பெறுகின்றன. அவற்றை விற்கும்போது, பெறப்பட்ட மானியத் தொகையிலிருந்து ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டியதில்லை.

அவற்றில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் வசிக்க வேண்டும். அதன் பின்னரே வீட்டை விற்க முடியும்.

பெர்லாயார் ரெசிடென்சில் ஈரறை வீடுகள், மூவறை வீடுகள், நான்கறை வீடுகள் என 880 வீடுகள் கட்டப்படும்.

தெலுக் பிளாங்கா எம்ஆர்டி நிலையத்துக்கும் லேப்ரடோர் பார்க் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலுள்ள நிலப்பகுதியில் இந்த வீடுகள் கட்டப்படும்.

இவ்வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் நான்கு ஆண்டுகள், எட்டு மாதங்கள்.

இக்குடியிருப்புப் பேட்டையில் கட்டப்படும் ஈரறை வீடுகளின் விலை (மானியங்கள் சேர்க்காமல்) $218,000லிருந்து $369,000 வரை. மூவறை வீடுகளின் விலை $420,000லிருந்து $562,000 வரை. நான்கறை வீடுகளின் விலை $578,000லிருந்து $788,000 வரை.

கட்டப்படும் புளோக்குகள் 19 மாடி உயரத்துக்கும் 46 மாடி உயரத்துக்கும் இடைப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்று வாடகை வீடுகளுக்கானது.

அப்பகுதியில் 7,000 வீவக வீடுகளும் 3,000 தனியார் வீடுகளும் கட்டப்படும்.

தோ பாயோவில் உள்ள மவுண்ட் பிளசெண்ட் கிரஸ்ட்டில் ஈரறை வீடுகள், மூவறை வீடுகள், நான்கறை வீடுகள் என 1,348 வீடுகள் கட்டப்படும். இந்த வீடுகள் தாம்சன் சாலையில் உள்ள நிலப்பகுதியில் அமைந்திருக்கும். இந்தக் குடியிருப்புப் பேட்டையில் 270 பொது வாடகை வீடுகள் கட்டப்படும்.

இக்குடியிருப்புப் பேட்டையில் கட்டப்படும் வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் நான்கு ஆண்டுகள், 11 மாதங்கள்.

ஈரறை வீடுகளின் விலை (மானியங்கள் சேர்க்கப்படாமல்) $209,000லிருந்து $373,000 வரை. மூவறை வீடுகளின் விலை $411,000லிருந்து $552,000 வரை. நான்கறை வீடுகளின் விலை $558,000லிருந்து $787,000 வரை.

பிடோக், செங்காங், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் நான்கு குடியிருப்புப் பேட்டைகள் கட்டப்படுகின்றன. அவற்றில் மொத்தம் 3,294 வீடுகள் இருக்கும். வீடுகளுக்கான காத்திருப்பு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவு.

ஈசூன் வட்டாரத்தில் சென்சாரு குரோவ், ஈசூன் கிளேட் என இரண்டு ஸ்டாண்டர்ட் குடியிருப்புத் திட்டங்கள் கட்டப்படுகின்றன. அவற்றில் மொத்தம் 1,395 வீடுகள் கட்டப்படுகின்றன. அவற்றுக்கான காத்திருப்பு நேரம் இரண்டு ஆண்டுகள், ஏழு மாதங்கள்.

செங்காங்கில் ஃபெர்ன்வேல் பிளேன்ஸ் எனும் 830 வீடுகளைக் கொண்ட ஸ்டாண்டர்ட் குடியிருப்புத் திட்டம் கட்டப்படுகிறது. இந்த வீடுகளுக்கான காத்திருப்பு நேரம் இரண்டு ஆண்டுகள், எட்டு மாதங்கள். இக்குடியிருப்புப் பேட்டையில் மூத்தோருக்கு ஏற்புடைய அம்சங்கள் கொண்ட 207 சமூகப் பராமரிப்பு வீடுகள் கட்டித் தரப்படும்.

பிடோக் வட்டாரத்தில் உள்ள சாய் சீ ஸ்திரீட்டில் பிங் யி கோர்ட் எனும் ஸ்டாண்டர்ட் குடியிருப்புத் திட்டம் கட்டப்படுகிறது. இதில் 862 வீடுகள் கட்டப்படும். அவற்றுக்கான காத்திருப்பு நேரம் இரண்டு ஆண்டுகள், ஒன்பது மாதங்கள்.

குறிப்புச் சொற்கள்