மூன்றாம் காலாண்டில் 874 டெங்கிச் சம்பவங்கள்

2 mins read
முந்தைய காலாண்டைவிட ஏறத்தாழ 35% குறைவு
d78e1b9e-f8cd-4153-9873-231d6ff79c03
ஒட்டுமொத்தத்தில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்கித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 874 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.

அதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்புநோக்க இது 35.8 விழுக்காடு குறைவு. முந்தைய காலாண்டில் 1,361 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.

மூன்றாம் காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) ஒருவர் டெங்கியால் உயிரிழந்தார். அதற்கு முந்தைய காலாண்டில் இருவர் உயிரிழந்தனர். தேசியச் சுற்றுப்புற வாரியம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட காலாண்டு டெங்கிக் கண்காணிப்புத் தகவலறிக்கையில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், மூன்றாம் காலாண்டில் டெங்கி பரவும் அபாயமுள்ள 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் முந்தைய காலாண்டைவிட இந்த விகிதம் 37 விழுக்காடு குறைவு என்றும் வாரியம் கூறியது.

மூன்றாம் காலாண்டில் அடையாளம் காணப்பட்ட 80 இடங்களில் 72ல், அதே காலகட்டத்தில் டெங்கிப் பரவல் அபாயம் நீங்கியதாக அறிவிக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

வாரியம் மூன்றாம் காலாண்டில் கண்டறிந்த கொசுக்களின் இனப்பெருக்க இடங்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய 34 விழுக்காடு குறைந்து 3,700ஆகப் பதிவானது.

ஒட்டுமொத்தத்தில், அக்டோபர் 11ஆம் தேதி நிலவரப்படி இந்த ஆண்டு பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு 3,527 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. 2024ல் அதே காலகட்டத்தில் 12,476 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ச் சம்பவங்கள் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வெப்பம் நிறைந்த காலகட்டமான மே முதல் அக்டோபர் வரை சிங்கப்பூரில் டெங்கிப் பரவல் அதிகரிக்கும் என்று வாரியம் எச்சரித்திருந்தது. ஏடிஸ் கொசுக்களின் இனப் பெருக்கமும் அவற்றில் டெங்கிக் கிருமியின் பெருக்கமும் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக இருக்கும் என்பது அதற்குக் காரணம்.

இந்நிலையில் டெங்கிப் பரவல் குறைந்திருப்பதாக வெளியான தகவலை வரவேற்ற தொற்றுநோய் சிகிச்சை வல்லுநர்கள், வாரியத்தின் டெங்கி ஒழிப்பு முயற்சிகள் போன்ற அம்சங்கள் இதற்குக் காரணம் என்கின்றனர்.

வாரியத்தின் ‘வோல்பாக்கியா’ திட்டம், டெங்கித் தொற்றைக் கிட்டத்தட்ட 75 விழுக்காடு குறைத்ததாக அவர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்