வளர்ப்புப் பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த 69 வயது முதியவருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (நவம்பர் 3) 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் சிறுமி 9 முதல் 10 வயது வரை இருந்தபோது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமைகளை அவர் நிகழ்த்தியதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம்மைத் தாமே காயப்படுத்திக் கொள்ளும் நடத்தைக்காக பள்ளிக்கூட ஆலோசகரிடம் சிறுமி அனுப்பப்பட்டார்.
அப்போது தமக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து 2020 ஜூலை 27ஆம் தேதி ஆலோசகரிடம் சிறுமி விவரித்தார். அதனைத் தொடர்ந்து சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் செயல்படும் குழந்தைப் பாதுகாப்புச் சேவை அமைப்பிடம் பள்ளி நிர்வாகம் புகார் அளித்தது.
பின்னர், 2020 ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இரண்டு நாள்களில், அதாவது செப்டம்பர் 2ஆம் தேதி குற்றவாளி கைது செய்யப்பட்டு, விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.

