சிங்கப்பூர் இளையர்களில் 68 விழுக்காட்டினர் வேலை மாறுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நிதி சார்ந்த லாபத்துக்கும் வேலை நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதே சமயம், நீக்குப்போக்குள்ள வேலை ஏற்பாடுகளும் வேலை - வாழ்க்கைச் சமநிலையும் முக்கியம் என்று ஆய்வில் பங்கெடுத்த இளையர்கள் கூறியதாக சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்தது.
இளையர் தொடர்பான வேலை வாய்ப்புகள் குறித்த ஆய்வின் முடிவுகள் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 10) ஒன் ஹாலந்து வில்லேஜில் உள்ள ‘எ குட் பிளேஸ்’ எனும் சமூக நடுவத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் உத்திபூர்வப் பங்காளித்துவப் பிரிவின் துணைத் தலைவரான இணைப் பேராசிரியர் ஜஸ்டினா டான், ஆய்வின் முதல்மை புலனாய்வாளராகச் செயல்பட்டார்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் 1,000க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கெடுத்தனர்.
ஆய்வில் பங்கெடுத்த இளையர்கள் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட முதலாளிகளும் ஆய்வில் பங்கெடுத்தனர்.
12 ஆய்வுக் குழுக் கலந்துரையாடல்களையும் ஆய்வாளர்கள் நடத்தினர்.
அவற்றில் ஏறத்தாழ 90 பேர் பங்கெடுத்தனர்.
பந்தயப் பிடிப்புக் கழகம் வழங்கிய நிதி மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
இளையர்களின் கல்வி நிலை அடிப்படையிலும் வயது அடிப்படையிலும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
18 - 25 வயதிற்குடப்பட்டோர், 26 - 30 வயதிற்குடப்பட்டோர், 31 - 35 வயதிற்குடப்பட்டோர் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, தரவுகள் ஆராயப்பட்டன.
18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட பிரிவில் 35 விழுக்காட்டினர் புதிய வேலை தேடுகின்றனர். 26 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட பிரிவில் 20 விழுக்காட்டினரும் 31 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட பிரிவில் 19 விழுக்காட்டினரும் புதிய வேலை தேடுகின்றனர்.