மொத்தம் 5.84 மில்லியன் வெள்ளி மதிப்பிலான மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 200க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டு வாரங்கள் நீடித்த காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்குப் பிறகு அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. 980க்கும் அதிகமான மோசடி நடவடிக்கைகளில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
முதலீட்டு மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, மின்வர்த்தக மோசடி, அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து நடத்தப்படும் மோசடி உள்ளிட்டவற்றில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர்களில் 83 பேர் பெண்கள், 149 பேர் ஆண்கள். அவர்கள் 17லிருந்து 77 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கடந்த மே மாதம் 23ஆம் தேதிக்கும் வியாழக்கிழமைக்கும் (ஜூன் 5) இடையே தீவு முழுவதும் பரவலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தனது அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2019ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் இடம்பெறும் மோசடிச் சம்பவங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளன.
சென்ற ஆண்டு 51,501 மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றன. அவற்றில் மொத்தம் 1.1 பில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகை பறிபோனது. புகார் அளிக்கப்பட்ட மோசடிச் சம்பவங்களுக்கு இந்தப் புள்ளி விவரங்கள் பொருந்தும்.
சிங்கப்பூரில் ஓராண்டு காலத்தில் மோசடிகளுக்குப் பறிபோன தொகை ஒரு பில்லியன் வெள்ளியைத் தாண்டியது இதுவே முதல்முறையாகும்.
தொடர்புடைய செய்திகள்
மே 23 - ஜூன் 5 அதிரடி நடவடிக்கையில் சிக்கிய சந்தேக நபர்கள், ஏமாற்றியது, கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமின்றி கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.

