சிங்கப்பூரின் தாம்சன் மருத்துவக் குழுமம், மலேசியாவின் ஜோகூரில் மூத்தோர் பராமரிப்பு வசதிகள் கொண்ட 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை, சொகுசு ஹோட்டல், சேவைகளுடன் கூடிய குடியிருப்பு ஆகியவற்றை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் லிம்மின் கட்டுப்பாட்டில் உள்ள, சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்கும் தாம்சன் மருத்துவக் குழுமம், ஜனவரியில் நிறுவப்பட்ட ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் முதலீடுகளை அறிவித்த ஆக அண்மைய நிறுவனம்.
இஸ்கந்தர் மேம்பாட்டு வட்டாரம், பெங்கெராங் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த வணிக, முதலீட்டு வட்டாரம் சிங்கப்பூர், மலேசியா ஆகிய இருநாட்டு மக்களுக்கும் ஏறக்குறைய 20,000 திறன்வாய்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர் பே என்று அழைக்கப்படும் 23.5 ஹெக்டர் பரப்பளவுத் திட்டம், ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் கட்டமைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் என்று தாம்சன் மருத்துவக் குழுமம் சொன்னது.
கிட்டத்தட்ட 18 பில்லியன் ரிங்கிட் (S$5.5 பில்லியன்) மதிப்புடைய திட்டம், தென்கிழக்காசிய நாடுகளில் ஆக விரிவான தனியார் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளையும் சொத்துகளையும் வழங்கும் திட்டமாக இருக்கும் என்று அது குறிப்பிட்டது.
திட்டத்தின் முதற்கட்டமாக தாம்சன் மருத்துவமனை இஸ்கந்தரியாவின் ஒரு பகுதியை உள்ளடக்கும். விரைவு ரயில் கட்டமைப்பு முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது அந்த மருத்துவமனைச் செயல்பாடுகளைத் தொடங்கும். மருத்துவமனையுடன் 47 மாடி சொகுசுக் குடியிருப்புக் கட்டடமும் அமைக்கப்படவிருக்கிறது.
அது, கட்டுமானம், செயல்பாடுகள், சுகாதாரப் பராமரிப்பு, விருந்தோம்பல் ஆகிய துறைகளில் 1,200க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல், இதர வணிக, வாழ்க்கைமுறைச் சேவைகள் எனத் திட்டத்தின் எஞ்சிய அம்சங்கள் நிறைவடையும்போது ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜோகூர் பே மேம்பாட்டின் மையத்தில் இருக்கும் மருத்துவமனையில் 500லிருந்து 1,000 படுக்கைகள் வரை நிரப்பக்கூடிய இடவசதியைக் கொண்டிருக்கும் என்று தாம்சன் மருத்துவக் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் கியட் லிம் கூறினார். அவர் செல்வந்தர் பீட்டர் லிம்மின் மகன்.
மருத்துவமனையில் வேலை செய்ய சேவையில் இருக்கும், சேவைக்குத் திரும்பும் மலேசிய மருத்துவர்களைச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் நாடும் என்றும் திரு கியட் லிம் குறிப்பிட்டார்.