2016ல் மேல்நிலைத் தேர்வுகளைப் பதினெட்டு வயதில் பெற்ற திருவாட்டி கேத்தரின் டான், உள்ளூர்ப் பல்கலைக்கழகத்திற்குத் தம் மதிப்பெண்கள் தகுதிபெறவில்லை என்பதைக் கண்டார்.
ஓரே பாடத்தில் தோல்வியுற்றாலாவது அவரால் திரும்ப பள்ளிக்குச் சென்று பயில முடியும். ஆனால், குறைந்த மதிப்பில் பாடங்களில் தேர்ச்சி பெற்றதால் மறுபடியும் பள்ளி திரும்ப முடியாத சூழல் அவருக்கு.
குறைந்த வருமானக் குடும்பத்தைச் சேர்ந்த திருவாட்டி கேத்தரினுக்கு, அதிக கட்டணம் கொண்டுள்ள தனியார்ப் பல்கலைக்கழகப் படிப்பு, எட்டாக்கனியாக உள்ளது.
இறுதியில் தனியார் தேர்வாளராக மேல்நிலைத் தேர்வை எழுதி இம்முறை சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பயில்வதற்குத் தகுதி பெற்றார். பட்டப்படிப்பின் இரண்டாவது ஆண்டில் அவருக்கு உபகாரச் சம்பளமும் கிடைத்தது.
இவரைப் போல 2025ல் சாதாரண நிலைத்தேர்வை 3,800 பேர் எழுதப்போவதாகவும் 1,500 பேர் மேல்நிலைத் தேர்வு எழுதப்போவதாகவும் சிங்கப்பூர்த் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்தது.
விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பின்வழி தங்கள் கல்வித் தகுதியை மேப்படுத்தி மேல்நிலைக்கல்வி அல்லது நல்ல வேலை வாய்ப்புக்களைப் பெற முடியும் என்று கழக பேச்சாளர் தெரிவித்தார்.
மேல்நிலைத் தேர்வில் 2016 முதல் 2025 வரை 1,000க்கும் அதிகமான தனியார் தேர்வு மாணவர்கள் இருப்பதாக அவர் கூறினார்.
அதே காலகட்டத்தில் ஓ நிலைக்கான தனியார் தேர்வு மாணவர்களின் எண்ணிக்கை 4,400லிருந்து 2,300க்குக் குறைந்தது.
பள்ளிப் பருவ மாணவர்கள் சாதாரண பள்ளிகளில் பயிலாதபோதும் தனிப்பட்ட முறையில் இவர்கள் சிங்கப்பூரின் தேசியத் தேர்வுகளை எழுத விரும்புகின்றனர்.
தேர்வு எழுதுவற்கான குறைந்தபட்ச வயதுத் தகுதி ‘ஓ’ நிலைக்கும் ‘ஏ’ நிலைக்கும் உண்டு. பள்ளி மாணவர்களுடன் இவர்கள் தேர்வை எழுதுவர்.
தனியார் மாணவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர், முன்னதாகப் பள்ளி மாணவர்களாக தேசிய தேர்வை எழுதியுள்ளதாக சிங்கப்பூர்த் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் கூறியது.