38 ஆக்ஸ்லி ரோடு விவகாரம்; அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் நியோ

2 mins read
146b6e12-ce41-427e-8487-0cc060def7b4
தேசிய நினைவுச் சின்னமாக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டின் முன்புறச் சுவரில் ஒட்டப்பட்ட கடிதங்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ வாழ்ந்த 38 ஆக்ஸ்லி ரோடு இல்லத்தை தேசிய நினைவுச் சின்னமாக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 6) விவாதிக்கப்பட்டது.

அதுகுறித்து கலாசார, சமூக, இளையர் துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ விளக்கினார்.

“38 ஆக்ஸ்லி ரோட்டில் உள்ள வீட்டுக் கட்டடத்தை மட்டும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளாது. வீடு தொடர்புடைய அனைத்து இடங்களையும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்,” என்றார் அமைச்சர் நியோ.

“அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு அந்த இடத்தை ஒரு மரபுடைமை பூங்காபோல் மாற்றி சிங்கப்பூரர்களுக்குப் பயன்படும் வகையில் அமைக்கத் திட்டமிடப்படும்,” என்றார் அவர்.

“சிங்கப்பூரர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக 38 ஆக்ஸ்லி ரோடு திகழ அனைத்துவிதமான வழிகளும் ஆராயப்படும்,” என்று அமைச்சர் நியோ குறிப்பிட்டார்.

கிட்டத்தட்ட 1,100 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள திரு லீ குவான் யூ வீட்டை அரசாங்கம் தீவிரமாக ஆராயும். வீட்டின் ஒரு சில பகுதிகளைப் புதுப்பிப்பது, தகர்ப்பது போன்றவை குறித்தும் பேசப்படும் என்றார் அவர்.

“திரு லீ குவான் யூ மற்றும் அவரது மனைவி திருவாட்டி குவா கியோக் சூவின் ஆசைப்படி குடும்பத்தின் தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாது. அதேபோல் அவர்கள் வாழ்ந்த வீட்டில் உள்ள தனிப்பட்ட தகவல்களுடன் கூடிய அடையாளங்கள் அனைத்தும் பாதுகாப்பாக மறைக்கப்படும்,” என்று அமைச்சர் நியோ சுட்டினார்.

இந்தியத் தலைவர் மகாத்மா காந்தி உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்கள் பலரின் வாழ்விடங்களைத் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அந்தந்த நாட்டின் அரசாங்கங்கள் வைத்துள்ளதை அமைச்சர் நியோ குறிப்பிட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க 38 ஆக்ஸ்லி ரோட்டை அரசாங்கம் எடுத்துக்கொள்வதன் மூலம் அது எதிர்காலத்தில் வேறு எந்த தனிப்பட்ட தரப்பினர் மூலமும் வாங்கப்படுவதைத் தடுக்கமுடியும் என்றார் அமைச்சர் நியோ. இதைப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிங்கப்பூரர்களும் ஆதரிப்பாளர்கள் என்றார் அவர்.

தற்போது 38 ஆக்ஸ்லி ரோடு வீட்டை 38 ஆக்ஸ்லி ரோடு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளராகத் திரு லீ குவான் யூவின் இளைய மகன் லீ சியென் யாங் உள்ளார்.

அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து திரு லீ சியென் யாங் நவம்பர் 17ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்யலாம். பின்னர் அது அரசாங்க அமைப்புகளால் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்