தென்னாப்பிரிக்காவிலிருந்து 35.7 கிலோ காண்டாமிருகக் கொம்புகள் சாங்கி விமான நிலையம் வழியாக லாவோசுக்கு கடத்தப்படவிருந்தது. அதைச் சிங்கப்பூர் அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.
இச்சம்பவம் நவம்பர் 8ஆம் தேதி நடந்தது. சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் காண்டாமிருகக் கொம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
35.7 கிலோ எடை கொண்ட அந்த 20 காண்டாமிருகக் கொம்புகளின் மதிப்பு 1.13 மில்லியன் வெள்ளி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதேபோல் நான்கு சரக்குக் கப்பல் ஏற்றுமதிகளில் விலங்குகளின் எலும்புகள், பற்கள், நகங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை கிட்டத்தட்ட 150 கிலோ எடையிருந்தன.
கைப்பற்றப்பட்ட கொம்புகள் வெள்ளை காண்டாமிருகங்களிடமிருந்து பெறப்பட்டவை என்று தேசியப் பூங்காக் கழகத்தின் வனவிலங்கு தடயவியல் அமைப்பு கூறுகிறது.
கைப்பற்றப்பட்ட மற்ற விலங்குகளின் பாகங்கள் குறித்த விவரங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
சரக்கு விமானங்களில் கொண்டு செல்லப்படவிருந்த மரச் சாமான்களுக்கு இடையில் விலங்குப் பாகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சரக்கு விமானங்களில் சாட்ஸ் (Sats) மற்றும் தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது என்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) அறிக்கை வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
சரக்குகளை எப்போதும்போல் ஊடுகதிர் சோதனை நடத்தியபோது சில சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தியதாகச் சாட்ஸ் நிறுவனத்தின் ஊழியர் வெங்கடேஸ்வரன் லட்சுமணன் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் சோதனைப் பணியில் உள்ள 30 வயது வெங்கடேஸ்வரன், “சரக்குப் பொட்டலங்கள் லேசாக தேசமடைந்திருந்தன. அதில் நாற்றம் அதிகமாக இருந்தது,” என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து பொட்டலங்கள் குறித்து மேலதிகாரிகளிடம் வெங்கடேஸ்வரன் புகார் அளித்தார். அதன் பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் பொட்டலங்களுக்குள் விலங்குப் பாகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அண்மையில் சிங்கப்பூரில் வனவிலங்கு வர்த்தகம் தொடர்பாகச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. கடத்தலில் ஈடுபடுபவர்களுக்குத் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 34.7 கிலோ காண்டாமிருகக் கொம்புகள் கைப்பற்றப்பட்டன. அதன் மதிப்பு 1.2 மில்லியன் வெள்ளி.

