தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்காண்டுகளில் சேர்ந்த 34,000 டன் மின்கழிவு

2 mins read
9185382e-5617-4d83-b938-693d7a0d9777
மின்கழிவு. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் முழுவதும் 34,000 டன்னுக்கும் அதிகமான மின்கழிவு சேகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு மேலும் வகைசெய்ய அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் எல்லா சமூக நிலையங்களிலும் மின்கழிவு மறுசுழற்சித் தொட்டிகள் வைக்கப்படும்.

இவ்வாண்டு இதுவரை மட்டுமே கிட்டத்தட்ட 10,000 டன் மின்கழிவு சேர்ந்தது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் சேர்ந்த மின்கழிவு அளவுடன் ஒப்பிடுகையில் இது 60 விழுக்காடு அதிகமாகும்.

மின்கழிவு மறுசுழற்சிப் பணிகளை மேற்கொண்டுவரும் நிறுவனமான அல்பா ஈ-வேஸ்ட் ஸ்மார்ட் ரிசைக்ளிங் (Alba E-Waste Smart Recycling) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) இத்தகவலை வெளியிட்டது.

மறுசுழற்சி செய்யப்படக்கூடிய மற்ற பொருள்களிலிருந்து பிரித்து வைக்கும் நோக்கில் 2021ஆம் ஆண்டு மின்கழிவு மறுசுழற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. பழைய மின்கலன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றை, மறுசுழற்சி செய்யப்படக்கூடிய மற்ற பொருள்களிலிருந்து பிரிப்பது இலக்கு.

2022ஆம் ஆண்டு தொடக்கத்துக்குள் 3,500 டன் மின்கழிவு சேர்ந்தது.

மின்கழிவு சேகரிப்பு இடங்களை குடியிருப்பாளர்கள் எளிதில் அடையாளம் காண அல்பா ஸ்டெப் அப் செயலி புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆக அருகில் இருக்கும் தொட்டிகளைத் தெரிந்துகொள்ள உதவும் அம்சம் உள்ளிட்டவை அச்செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. மறுசுழற்சி நடவடிக்கைகளுக்கு வகைசெய்வோருக்கு வெகுமானம் அளிக்கும் அம்சமும் செயலியில் உண்டு.

சிங்கப்பூரின் மின்கழிவு மறுசுழற்சித் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகளை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அனைத்துலக மின்கழிவு தினத்தை அனுசரிக்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

2026ஆம் அண்டு நடுப்பகுதிக்குள் எல்லா சமூக நிலையங்களிலும் மின்கழிவுத் தொட்டிகள் வைக்கப்பட்ட பிறகு தீவு முழுவதும் மொத்தம் 1,015 சேகரிப்பு இடங்கள் இருக்கும்.

தற்போது சுமார் 1,000 சேகரிப்பு இடங்கள் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை, ஓராண்டுக்கு முன்பு இருந்த கிட்டத்தட்ட 870ஐவிட அதிகமாகும்.

சேகரிக்கப்பட்ட மின்கழிவு அளவு அதிகரித்திருந்தாலும் தனது நிறுவனமோ பொதுமக்களோ மெத்தனமாக இருக்கக்கூடாது என்கிறார் அல்பா ஈ வேஸ்ட் தலைமை நிர்வாகி ஜேக்கப் லேம்ஸ்டோர்ஃப்.

சென்ற ஆண்டு 11 விழுக்காட்டு சிங்கப்பூர் வீடுகள் மறுசுழற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த விகிதம், இதுவரை பதிவானதில் ஆகக் குறைவானதாகும்.

மறுசுழற்சிப் பழக்க வழக்கங்கள் பரவலாக இல்லாதது, நீல நிற மறுசுழற்சித் தொட்டிகள் மாசடைந்தது உள்ளிட்டவை அதற்கான காரணங்கள்.

குறிப்புச் சொற்கள்