தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மோசடியில் பாதிக்கப்பட்டோருக்கு $1.1 பில்லியன் இழப்பு; விசாரணையில் 232 பேர்

2 mins read
497780fe-d407-4835-b63d-c30d4d25197f
சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களால் 2024ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டோர் 2024ல் கிட்டத்தட்ட $1.1 பில்லியனை இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஓராண்டில் ஆக அதிகமான இழப்பு என்றும் கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோர் $6.15 மில்லியன் இழந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரமாக தீவிர நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், 16 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட 83 பெண்கள், 149 ஆடவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மோசடியில் ஈடுபட்ட அல்லது அதற்கு துணைபோனதாக நம்பப்படுவதாக காவல்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

மோசடிகளில் நண்பர் எனக் கூறி பணம் பெறுவது, முதலீடு செய்வதாகக் கூறுவது, வேலை வாங்கித் தருவதாகத் தெரிவிப்பது, இணைய வர்த்தக மோசடி, அரசு அதிகாரிபோல் செயல்பட்டு மோசடியில் ஈடுபடுவது, வாடகைக்கு இடம் பிடித்துத் தருவதாகக் கூறுவது ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.

விசாரணை வளையத்தில் உள்ளோர் ஏமாற்றுதல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது, உரிமம் இல்லாமல் சேவை வழங்கியது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதிவரை வர்த்தகக் குற்றப் பிரிவு அதிகாரிகளும் ஏழு காவல் நிலைய அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்களால் 2024ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டோர் கிட்டத்தட்ட $1.1 பில்லியனை இழந்ததாக அறியப்படுகிறது. இதுவே ஓராண்டில் பாதிக்கப்பட்டோர் இழந்த ஆக அதிகத் தொகை என்று கூறப்படுகிறது. ஒப்புநோக்க, 2023ஆம் ஆண்டு $651.8 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட இழப்பு அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 70% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடிகள் குறித்த மேல்விவரங்களுக்கு அது தொடர்பான அவசர தொலைபேசி அழைப்பான 1799 அல்லது www.scamshield.gov.sg. என்ற இணையத்தளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அவசரத் தொலைபேசி எண் 1800-255-0000யும் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்