மரின் பரேட் வட்டாரத்தில் 68 வயது ஆடவரைத் தாக்கியதாக நம்பப்படும் 23 வயது இளையரைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
தாக்கப்பட்ட 68 வயது ஆடவர் பின்னர் உயிரிழந்தார்.
வியாழக்கிழமை (நவம்பர் 13) 5000சி, மரின் பரேட் ரோட்டில் உள்ள லகுனா பார்க் கூட்டுரிமை வீட்டிலிருந்து உதவிகோரி பிற்பகல் 12.45 மணியளவில் அழைப்புவந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் 68 வயது ஆடவர் காயமுற்ற நிலையில் காணப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர். சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட ஆடவர் பின்னர் உயிரிழந்தார்.
ஆபத்தான ஆயுதங்கள் மூலம் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக நம்பப்படும் 23 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். ஆடவரிடமிருந்து இரண்டு பேனாக் கத்திகள் கைப்பற்றப்பட்டன.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் சம்பவம் தொடர்பில் பிற்பகல் 1.10 மணிக்கு அழைப்பு வந்ததாகவும் ஆடவர் ஒருவர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்குச் செய்தியாளர்கள் சென்றபோது கட்டடத்தின் 13வது தளத்திற்குச் செல்லும் பாதைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். 12வது, 14வது தளங்களில் காவல்துறை அதிகாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இருப்பினும், 14வது தளத்தில் இருந்த குடியிருப்பாளர்கள் எந்தவித சத்தமும் கேட்கவில்லை என்று தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணை தொடர்கிறது.

