தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2 லாரிகள் மோதியதில் 21 பேர் காயம், ஓட்டுநர் கைது

2 mins read
9a73a642-4d49-4704-8feb-68c17cedc50f
சுங்கை காடுட் வட்டாரத்தில் புதன்கிழமை (அக்டோபர் 15) நேர்ந்த விபத்தில் காயமுற்ற 21 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சுங்கை காடுட் வட்டாரத்தில் இரண்டு லாரிகள் மோதிய விபத்தில் 21 பேர் காயமுற்றனர். ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படுவதன் தொடர்பில் 24 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். அவர் ஓட்டிச் சென்ற லாரியில் ஒன்பது பயணிகள் இருந்தனர்.

விபத்து புதன்கிழமை (அக்டோபர் 15) இரவு 10.45 மணிக்கு நேர்ந்தது. இது குறித்த அறிக்கையைக் காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) வெளியிட்டது.

சுங்கை காடுட் அவென்யூ, சுங்கை காடுட் லூப் சந்திப்பில் போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருந்தபோது ஓட்டுநர் அதைக் கடந்துசென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

போக்குவரத்து விளக்கு பச்சையாக இருந்தபோது குறுக்காகச் சென்ற மற்றொரு லாரியுடன் அவரின் லாரி மோதியது. அந்த மற்றொரு லாரியில் 11 பயணிகள் இருந்தனர்.

இரு லாரிகளில் இருந்த பயணிகள் அனைவரும் இரண்டாம் லாரியின் ஓட்டுநரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்குக் காயங்களும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டன.

விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 24 வயது ஓட்டுநருக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும். எந்த வகையான வாகனத்தை ஓட்டுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்படக்கூடும்.

அவர் ஏற்கெனவே அத்தகைய குற்றத்தைப் புரிந்திருந்தால், குறைந்தது ஓராண்டுச் சிறைத்தண்டனையும் அதிகபட்சம் பத்தாண்டுவரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.

போக்குவரத்து விளக்கு சிவப்பாக இருக்கும்போது வாகனத்தில் கடப்பது, தொடர்ந்து அதிக அக்கறைக்குரியதாய் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

அத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டுடன் (2024) ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முற்பாதியில் 25.3 விழுக்காடு குறைந்தது. கடந்த ஆண்டில் 17,508ஆக இருந்த அது, இவ்வாண்டில் 13,073க்கு இறங்கியது.

இருப்பினும் சிவப்பு விளக்கைக் கடந்ததால் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை போன ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதற்பாதியில் 38.3 விழுக்காடு கூடியது. சென்ற ஆண்டில் 47ஆக இருந்த அது, இவ்வாண்டில் 65க்கு அதிகரித்தது. அவற்றுள் சில விபத்துகள், மரணங்களையும் விளைவித்தன.

போக்குவரத்துச் சந்திப்புகளை நெருங்கும்போது மெதுவாகச் செல்லுமாறு வாகன ஓட்டுநர்களுக்குக் காவல்துறை நினைவூட்டுகிறது. போக்குவரத்து விளக்கு பச்சையாக இருந்தாலும் ஏதேனும் இடையூறுகள் உள்ளனவா என்பதைக் கவனித்துச் செல்லுமாறு அது கேட்டுக்கொள்கிறது.

அத்துடன் போக்குவரத்து விளக்கு மாறும்போது வாகனத்தை நிறுத்துவதற்குப் போதிய நேரம் இருப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறும் வாகன ஓட்டுநர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்