தேசிய பூங்காக் கழகத்தின் ‘மலர்ந்த சமூகம்’ எனப் பொருள்படும் ‘கம்யூனிட்டி இன் ப்ளூம்’ (CIB) தோட்டக்கலைத் திட்டம் 2025-இல் தனது 20வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதையொட்டி, பயிற்சிகளும் விரிவாக்கத் திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.
“எங்களது அமைப்பின் பிரதிநிதிகள், சமூகத்திலும் சக தோட்டக்காரர்களிடமும் சென்றடைவதற்கும், ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கும் முறையான பயிற்சியை வழங்குவதற்கு இது சரியான தருணம்,” என்று தேசிய பூங்காக் கழகத்தின் சமூகப் பங்களிப்பு (ஈடுபாடு) பிரிவின் இயக்குநர் தாமஸ் லீ கூறுகிறார்.
அண்மையில், மாஸ்டர் கம்யூனிட்டி கார்டனர் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தேசிய பூங்காக் கழகத்தின்தோட்டக்கலை நிபுணர்களால் மண் மேலாண்மை, தாவர ஊட்டச்சத்து, பூச்சி, நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் இந்த பயிற்சி வகுப்புகள் அடங்குகின்றன.
நான்கு அமர்வுகளைக் கொண்ட முதல் கட்டப் பயிற்சி ஜூலை மாதம் நடந்தேறியது.
இதற்கான 100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை தேசிய பூங்காக் கழகம் நியமித்துள்ளது.
சிறந்த தோட்டக்கலைத் திறன்களைக் கொண்ட தன்னார்வலர்களான இவர்கள், தோட்டக்கலை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு பிறருடன் இந்தத் துறையில் தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்கின்றனர்.
2005ல் தொடங்கப்பட்ட முதல் ஆண்டில் 200-க்கும் குறைவான சமூக தோட்டக்கலை குழுக்களே இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் தற்போது சிங்கப்பூரில் இத்தகைய குழுக்களின் எண்ணிக்கை 2,000க்கும் மேல் பெருகியுள்ளது. அத்துடன், 48,000க்கும் மேற்பட்ட தோட்டக்கலை ஆர்வலர்களும் தற்போது செயல்பட்டு வருகின்றனர்.
இந்த மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக, கடந்த வாரம் ஆகஸ்ட் 23ல் ஹார்ட்பார்க்கில் தோட்டக்கலை விழா தொடங்கப்பட்டது. இது ஆகஸ்ட் 31 வரை நடைபெறுகிறது.

