தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15 மாதக் காத்திருப்பக் காலம்; நான்கில் ஒரு விலக்கு விண்ணப்பம் ஏற்பு

2 mins read
e8647055-ed55-4b42-b934-a79f29ec991d
மானியம் வழங்கப்படாத வீவக மறுவிற்பனை வீட்டை வாங்க திட்டமிடும் தனியார் வீட்டு உரிமையாளர்கள், முன்னாள் உரிமையாளர்கள் ஆகியோருக்கு இந்த 15 மாதக் காத்திருப்புக் கால விதிமுறை பொருந்தும். - படம்: சாவ்பாவ்

தனியார் வீட்டை விற்பனை செய்துவிட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டை வாங்க திட்டமிடுவோர் அதற்கு 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், இந்த 15 மாதக் காத்திருப்புக் காலத்திலிருந்து விலக்கு கோரி சமர்ப்பிக்கப்படும் நான்கில் ஒரு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறை 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை விலக்கு கோரி ஏறத்தாழ 5,500 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஒவ்வொரு விண்ணப்பமும் மிக உன்னிப்பாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏறத்தாழ 25 விழுக்காடு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

வீவக வீடுகள் உண்மையில் தேவைப்படும் குடும்பங்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கவே இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாது, தனியார் வீடுகளை விற்பவர்களிடம் வீட்டை விற்ற பிறகு பெரும்பாலும் அதிக பணம் இருக்கும். இப்பிரிவினரும் வீவக வீடு வாங்க முன்வந்தால் வீவக வீடுகளுக்கான தேவை அதிகரித்துவிடும், வீட்டு விலையும் அதிகரிக்கும் என்று கருதி இந்த விதிமுறை நடப்புக்கு வந்தது.

விலக்கு கோரி சமர்ப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை வீவக வெளியிடவில்லை. எவையெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறித்தும் அது தெரிவிக்கவில்லை.

மானியம் வழங்கப்படாத வீவக மறுவிற்பனை வீட்டை வாங்க திட்டமிடும் தனியார் வீட்டு உரிமையாளர்கள், முன்னாள் உரிமையாளர்கள் ஆகியோருக்கு இந்த 15 மாதக் காத்திருப்புக் கால விதிமுறை பொருந்தும்.

நான்கறை வீடு் அல்லது அதற்கும் சிறிய வீடுகளை வாங்க முற்படும் 55 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

இந்த விதிமுறை 2027ஆம் ஆண்டுக்கு முன்பு தளர்த்தப்படக்கூடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹோங் டாட் அண்மையில் தெரிவித்தார்.

விற்பனைக்கு விடப்படும் புதிய, மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்