இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மொத்தமாக 13 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாகச் செலவிட்டனர்.
அத்தொகையில் கிட்டத்தட்ட பாதி, இணையம்வழி மேற்கொள்ளப்படாத விளம்பரங்களுக்குச் செலவிடப்பட்டன. பதாகைகள் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் அவற்றில் அடங்கும்.
இணையம்வழி மெற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்கு மொத்தத் தொகையில் சுமார் 16 விழுக்காடு செலவிடப்பட்டது. நேரடி பிரசாரக் கூட்டங்களை நடத்த அரசியல் கட்சிகள் மொத்தமாக 1.7 மில்லியன் வெள்ளி செலவிட்டன.
எஞ்சிய தொகை அலுவலக வாடகை, பொருள்கள், போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, 2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் எல்லா கட்சிகளின் தேர்தல் செலவும் 42 விழுக்காடு கூடியது. அவற்றில் ஆளும் மக்கள் செயல் கட்சி (மசெக) ஆக அதிகமாக 9.4 மில்லியன் வெள்ளி செலவு செய்தது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக 3.6 மில்லியன் வெள்ளி செலவிட்டன. 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர்.
எதிர்க்கட்சிகளுக்கிடையே 26 வேட்பாளர்களைக் களமிறக்கிய பாட்டாளிக் கட்சிதான் ஆக அதிகமாக 1.6 மில்லியன் வெள்ளி செலவிட்டது. அதற்கு அடுத்தபடியாக 11 வேட்பாளர்களைக் களமிறக்கிய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி 583,440 வெள்ளி செலவு செய்தது.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கு அடுத்த நிலையில் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி 13 வேட்பாளர்களுக்கு 441,548 வெள்ளி செலவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
எல்லா கட்சிகளும் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வாக்காளருக்கும் ஐந்து வெள்ளிக்குள் செலவு செய்தன. அந்த அதிகபட்சத் தொகை, பணவீக்கம் காரணமாக சென்ற பொதுத் தேர்தலில் நான்கிலிருந்து ஐந்து வெள்ளிக்கு உயர்த்தப்பட்டது.
பொதுமக்களின் பார்வைக்காக தேர்தல் துறை செலவு குறித்த முழு விவரங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 211 வேட்பாளர்கள் இவ்வாண்டு மே மாதம் மூன்றாம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர்.