துவாஸ் சோதனைச்சாவடியில் 12 மோட்டார்சைக்கிளோட்டிகள் கைது

1 mins read
1ef697f8-829c-4af4-85b0-bae54a59cd90
ஏறக்குறைய 300 மோட்டார்சைக்கிளோட்டிகள் அமலாக்கச் சோதனைக்காக நிறுத்தப்பட்டனர். - படங்கள்: காவல்துறை, தேசிய சுற்றுப்புற வாரியம்

துவாஸ் சோதனைச்சாவடியில் செல்லுபடியாகும் உரிமம், காப்புறுதி இன்றி மோட்டார்சைக்கிள் ஓட்டியதாகக் கூறப்படும் 12 பேர் அக்டோபர் 14ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.

போக்குவரத்துக் காவல்துறை, தேசிய சுற்றுப்புற வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை அமலாக்கச் சோதனை நடத்தியதாக காவல்துறை வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) தெரிவித்தது.

கைதானவர்கள் 20 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஏறக்குறைய 300 மோட்டார்சைக்கிளோட்டிகள் அமலாக்கச் சோதனைக்காக நிறுத்தப்பட்டதாக காவல்துறை சொன்னது.

வாகனப் புகை வெளியேற்றம், அதிகப்படியான சத்தம் தொடர்பான குற்றங்களுக்காக தேசிய சுற்றுப்புற வாரியம் 83 அழைப்பாணைகளை வழங்கியது. முறையான உரிமத் தகடுகளைக் காண்பிக்காத வாகனவோட்டிகளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் 67 அழைப்பாணைகளை வழங்கியது.

சிங்கப்பூரின் போக்குவரத்துச் சட்டங்களுக்கும் வாகன விதிகளுக்கும் இணங்காத வாகனவோட்டிகள் தண்டனைகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல்துறை கூறியது. வெளிநாட்டுப் பதிவுபெற்ற வாகனங்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம்.

“மோட்டார்சைக்கிளோட்டிகளும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் சாலைகளில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அனைத்து மோட்டார்சைக்கிளோட்டிகளும் போக்குவரத்துச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, வாகனத்தைப் பாதுகாப்பாக ஓட்டும் பழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு போக்குவரத்துக் காவல்துறை நினைவூட்ட விரும்புகிறது,” என்று அந்த அறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்