உள்ளூரில் தொடங்கப்பட்ட கேக் கடையான 12 கப்கேக்ஸ் (12 Cupcakes) சிங்கப்பூரில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுள்ளது.
12 கப்கேக்ஸ் தற்காலிகமாக வேறு அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டதாக புதன்கிழமை (அக்டோபர் 29) தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து அதன் கடைகள் மூடப்பட்டுள்ளன.
அதன் இணையத்தளத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கள் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை 12 கப்கேக்ஸ் வெளியிடவில்லை. அந்நிறுவனத்தின் எல்லா இணையப் பக்கங்களும் நீக்கப்பட்டுவிட்டன.
12 கப்கேக்ஸ், 20 கடைகளை இயக்கி வந்ததாக அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டது.
கேளிக்கைக் கலைஞர் ஜேமி டியோ, அவரின் முன்னாள் கணவரும் வானொலிப் படைப்பாளருமான டேனியல் ஓங் இருவரும் 2011ஆம் ஆண்டு 12 கப்கேக்சைத் தொடங்கினர். பிறகு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அது இந்தியாவின் கோல்கத்தா நகரில் இயங்கும் துன்செரி குழுமத்துக்கு விற்கப்பட்டது. துன்செரி குழுமம், இந்தியாவின் 10 ஆகப் பெரிய தேநீர் நிறுவனங்களில் ஒன்றாகும்.
12 கப்கேக்ஸ் விற்கப்பட்ட மாதம்தான் தாங்கள் விவாகரத்து செய்துகொள்ளப்போவதாக ஜேமி டியோவும் டேனியல் ஓங்கும் அறிவித்திருந்தனர்.
2013லிருந்து 2016க்கு இடைப்பட்ட காலத்தில் தங்களின் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இயல்புக்குக் குறைவான சம்பளம் வழங்கியதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருவரும் ஆளுக்கு 24 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினர். 2021ல் ஆளுக்கு 65,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.


