‘12 கப்கேக்ஸ்’ மூடல்; மனிதவள அமைச்சின் சேவை நிலையத்தை நாடிய ஊழியர்கள்

2 mins read
776d2325-d25a-4f8c-85eb-ebae26a1145f
எந்தவொரு முன்னறிவிப்பு இல்லாமல் நிறுவனம் அதன் செயல்பாட்டை நிறுத்திகொண்டதாக ‘12 கப்கேக்ஸ்’ கடைகளின் பணியாற்றிய ஊழியர்கள் ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்ளூர் நிறுவனமான ‘12 கப்கேக்ஸ்’ அதன் கடைகளை நிரந்தரமாக மூடியது. அதனையடுத்து, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த கிட்டத்தட்ட 15 ஊழியர்கள் பெண்டமியர் சாலையில் செயபட்டுவரும் மனிதவள அமைச்சின் உதவி நிலையத்தை நாடினர்.

தங்கள் சம்பள பாக்கி, நிலுவைத் தொகை ஆகியவற்றை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுகிறது என்ற தகவலும் பணிநீக்கக் கடிதமும் ‘வாட்ஸ்அப்’ மூலம் தங்களுக்கு அக்டோபர் 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு அனுப்பப்பட்டதாக ‘12 கப்கேக்ஸ்’ ஊழியர்கள் ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தனர்.

மேலும், வேறு எந்தவொரு தகவலையும் நிறுவனம் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

வர்த்தகக் கணக்குகளைச் சரிபார்த்து, அலுவல்முறையில் அந்நிறுவனத்தைக் கலைக்கும் நடவடிக்கைகளில் ஏஏஜி பெருநிறுவன ஆலோசனை நிறுவனம் பணியமர்த்தப்பட்டுள்ளது.

அதனிடம் இதுகுறித்து கேட்டபோது, அனைத்து தகவல்களையும் சேகரிப்பதற்குமுன் ‘12 கப்கேக்ஸ்’ நிறுவனத்தின் வர்த்தகச் செயல்பாடுகள், நிதி நிலைமை, கலைப்புக்கான காரணங்கள் ஆகியவற்றைக் குறித்த விவரங்களை வழங்க முடியாது எனத் தெரிவித்ததாக ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ கூறியது.

எந்தவொரு முன்னறிவிப்புமின்றி திடீரென நிறுவனம் மூடப்பட்டதாக அந்த நிறுவனத்தின் கடைகளில் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்தவர் கூறியதாகவும் அது சொன்னது.

மேலும், “நாங்கள் செய்வதறியாது தவித்து வருகிறோம். எங்கள் அன்றாட வாழ்க்கை செலவினங்களை எப்படி சமாளிக்கப் போகிறோம் எனத் தெரியாமல் தவித்து வருகிறோம்,” என அவர் மிகுந்த வேதனையுடன் கூறியதாகவும் அது தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

அந்நிறுவனத்தில் பணிபுரிந்த வெளிநாட்டு ஊழியர்களில் சிலர் தங்கள் சொந்த நாட்டில் இருக்கும் குடும்பங்களுக்குப் பணம் அனுப்ப முடியாமலும் அவர்களில் குடும்பத்துடன் சிங்கப்பூரில் வசிப்போர் பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த வழித் தெரியாமலும் தவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்